எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் எல்லா வசதிகளும், ஆனால், தொட்டுப் பேசும் உரிமையில் பலருக்கும் தோழமை வாய்ப்பதில்லை. தோள் தொட்டுப் பேசுவது உறவுக்கும் உரிமைக்கும் அடையாளம். பரிவுக்கும், நட்புக்கும் அடையாளம்.
தோழனே! உனது தோள்களைத் தொட்டு நான், வாழைத்தண்டுபோல் வழவழப்பான வார்த்தைகள் சொல்ல வந்திருக்கிறேன். வாழைத்தண்டு வயிற்றுக்கு நல்லது. இந்த வார்த்தைகளோ உன் வாழ்க்கைக்கு நல்லது.
நாம் ஒவ்வொருவருமே, வாழ்க்கையென்னும் கடலுக்குள்ளே சுழல்கின்ற சூறாவளிதான். நம்மில் சில சூறாவளிகள் கரைகடக்கும் முன்பே வலுவிழக்கின்றன. தடைகளை உடைக்கும் உற்சாகத்தோடு புறப்படும் உள்ளங்கள் சொல்ல முடியாத சோர்வில் சிறைப்படும் அவலம் சிலபொழுது நேர்கின்றதே… ஏன்?
எதிர்காலம் பற்றி யோசிக்கும் போதும், நம்பிக்கைச் சிந்தனைகளை வாசிக்கும் போதும் புடைத்தெழுந்து நிற்கும் புதுமைக் கனவுகள், நடைமுறைக்கு வரும்போது நடுக்கம் காண்கிறதே… எதனால்?
இந்த கேளவிக்கு விடைகளைக் கண்டறியவும், நம் கால்களைக் கட்டிப் போடும் தடைகளை களைந்தெறியவும் இந்தக் கட்டுரைத் தொடர் நமக்குக் களமமைத்துக் கொடுக்கும்.
நானறிந்த வரையில், புதிய வெற்றிகளைப் பெற விடாமல் தடுப்பதில் முதலிடம் பெறுவது எது தெரியுமா?
நம் பழைய தோல்விகளின் பிம்பங்கள்தான். மாணவர்களையே எடுத்துக் கொள்ளுங்கள் காலாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைந்தால், அரையாண்டுத் தேர்வு நெருங்க நெருங்க நடுக்கம் வருகிறது. இறுதித்தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கடிதம் போட்டு அழைத்தது போல் காய்ச்சல் வருகிறது.
தெரிந்த விடைகளைக் கூட மூளை தற்காலி கமாகத் தொலைத்து விடுகிறது. தேர்வு அறையை விட்டு வெளியேறும்போது வழியெல்லாம் தென்படுகிறது. சரியான விடை! இதற்கென்ன காரணம்? காலாண்டுத் தேர்வின் கலவரப் பதவுகள் மூளையை முற்றுகையிட்டதுதான் காரணம்.
தேர்வுத் தோல்வியைவிட, அதன் தொடர்ச்சியாய்க் கிடைத்த அவமானங்கள்தான் சோர்வு தருகின்றன.
இது தேர்விக்கு மட்டுமல்ல, வாழ்வுக்கும் பொருந்தும், பழைய தோல்விகளின் வடுக்களை, நம் மனதில் முளைக்கும் மாயக் காரணமென்று குத்திக் குத்தி மீண்டும் காயம் செய்கிறது. அந்த பயணத்தில் பின்தங்கிப்போக நேர்கிறது.
மற்றவர்களின் வெற்றிகளைப் பற்றிப் பாடம் பயில்கிற நாம், அவர்களின் தோல்வித் தழும்புகளைத் தெரிந்து கொள்வதில்லை. சோதனை என்கிற முரட்டுக் காளையின் இரண்டு கொம்புகளையும் முறித்துப் போட்டால்தான் சாதனை.
விஞ்ஞானிகள் வரலாறு நமக்கு ஒன்றைச் சொல்கிறது. தொடர் பரிசோதனைகளின் தோல்விகள்தான் பல அறிவியல் வெற்றிகளின் அடித்தளம். ஆனால் சிலர், தோல்வி உரசிப் போனால் கூடத் துவண்டுவிடுகிறார்கள். ஒருமுறை வணிகத்தில் தோல்வி கண்டவன் புதிய முயற்சிக்கு பயப்படுகிறான். எல்லாம் பழைய ஞாபகங்களின் பயமுறுத்தல் காரணமாகத்தான்.
வெற்றி என்பது, சிகரங்களைத் தொடுவது என்பது பொதுவான நம்பிக்கை. அதற்குமுன் பழைய பள்ளத்தாக்குகளில் இருந்து எழுவதற்கு உதவும் கைதான், தன்னம்பிக்கை.
நம் பெயரை இந்த உலகம், நாம் வெல்லும் போதுதான் சொல்லும். அதுவரை வெல்லப்போகிறாய் என்று உள்ளத்திற்கு உரக்கச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியவர்கள் நாம் தான்.
‘’நம்மால் முடியுமா?’’ ‘’மூன்றாண்டிற்கு முன்னர் விழுந்து முகத்தில் மண். மறுபடி தோற்றால் மதிக்க மாட்டார்களே’’ என்று கடந்த காலத்தின் சோகத்தை மறுபடி மறுபடி உயிர் பித்தால் மனம் சோகங்களின் மியூசியமாய் ஆகும்.
அன்று பழுதாய்ப்போனதை மறப்போம். இன்று புதியதாய் மறுபடி பிறப்போம். இந்த உறுதியின் விளைவாய் உலகம் மீதான பார்வை புதிதாகும். உள்ளம் உற்சாக ஊற்றாகும்.
ஆதிநாள் தொடங்கி இன்று வரை பூமி தன்னையே சுற்றிப் பார்க்கிறது. ஏன் தெரியுமா? குறையில்லாத மனிதன் ஒருவனாவது கண்ணுக்குப் படுகிறானா என்றுதான் தேடுகிறது. அப்படியொரு பிறவியை உலகம் இதுவரை சந்திக்கவேயில்லை. அதனால்தான் சாதனையாளர்கள், தங்கள் பலவீனமான பக்கங்களை சிந்திப்பதேயில்லை.
ஓடு தளத்தில் எட்டிப் பிடிக்கும் இலக்கில் ஒரு ரிப்பன் கட்டப்பட்டிருக்கும், தடகள வீரருக்கு, கடக்க வேண்டிய தூரம் கண்ணுக்குத் தெரியாது. எட்டிப் பிடிக்க வேண்டிய இலக்கு மட்டும் புலப்படும். தூரம் பார்த்து ஏங்கினாலோ ஓடத் தோன்றாது.
தூரம் பார்த்தாலே சோர்வு வருகிறது. பாரம் சுமந்து கொண்டே தூரம் கடப்பது சாத்தியமா?
நேற்றின் வடுக்கள் வழியைத் தடுக்கும்
தடைக்கல் ஆக்க் கூடாது;
காற்றாய்க் கிளரும் ஆற்றல் இருந்தும்
கவலை கொள்ளல் ஆகாது!
தாழ்வு நேர்ந்த நினைவுகள் உனது
தலைமேல் கனக்கும் பொதிதூட்டை!
தோழா அவைஉன் முயற்சி அலையில்
தூள்தூள் ஆகும் மணல் கோட்டை!
சோர்வு என்கிற செயற்கை இருட்டில்
சூரியன் உனக்கா சிறைவாசம்?
போர்வை போலப் பழையதை உதறு;
பூமி உனது புகழ் பேசும்!
சாதிக்கின்ற வலிமை இருந்தும்
சஞ்சலம் கொண்டா பயப்படுவாய்!
பாதையை மறிக்கும் தயக்கங்கள் உடைத்து
புன்னகை நதியாய்ப் புறப்படுவாய்!
(இன்னும் பேசுவேன்)