வாழ்வில் மிகப்பெரிய இடங்களை எட்டிய பிறகும் சின்னச் சின்ன மனத்தடைகளால் சிலர் தேங்கி விடுகிறார்கள்.ஐ.டி.துறையில் பெரிய பொறுப்பில் இருந்த இளம்பெண் இந்தத் தொந்தரவால் தன் இலக்குகளைஎட்ட முடியாமல் தவித்தார்.மனிதவள மேம்பாட்டு அலுவலரின் பரிந்துரைகாரணமாக மனநல நிபுணர் ஒருவரை சந்தித்தார்.
அந்தப் பெண்ணின் குழந்தைப் பருவத்தில் அவருடைய பெற்றோர்,”நீ ஒண்ணுத்துக்கும்ஆகமாட்டே” என்று ஆசீர்வதித்ததும்,
ஆசிரியர் ஒருவர்,”நீ வீடு கூட்டிதான் பொழைக்கப் போறே”என்று வாழ்த்தியதும் ஆழ் மனதில் தங்கிவிட்டதை அறிய
முடிந்தது.அந்த விமர்சனங்களே வளர்ந்த பிறகும் வேகத்தடைகளாய்
வந்து வந்து வளர்ச்சிக்குத் தடைபோடுகின்றன.
நேற்றைய சுமைகளைவிட இன்றைய வெற்றிகளே நம் இப்போதைய
நிலையின் அடையாளம்.தன்னுடைய தகுதி தனக்கே தெரியாத அளவுக்குதடுமாற்றம் வரும்போது, நம் மனதுக்கு நாமே சொல்லிக் கொ ள்ள வேண்டிய
விஷயம்தான்,”தயக்கம் துடை”.
தரையில் தெரியாமல் எதையாவது கொட்டிவிட்டால் உடனே துடைக்கத் தெரிகிற நமக்கு மனதில் ஒட்டிக் கொள்ளும் தயக்கத்தைத் துடைக்க ஏன்தாமதமாகிறது?
கேட்க வேண்டியதை,கேட்கக் கூடியவர்களிடம் கேட்பதில் தயக்கம்.
செய்ய வேண்டியதை செய்வதில் தயக்கம்,தடுக்க வேண்டியதைத்
தடுப்பதில் தயக்கம்…..இவைதான் வெற்றியை நெருங்க விடாமல் நெட்டித்தள்ளுபவை.தீர யோசித்து,பின் தயங்காமல் இறங்குவதே வெற்றிக்கு வழி.
செய்யத் தூண்டும் செயல்கள் எல்லாம்
செய்து முடிக்கத்தான்
வையம் போற்றும் விதமாய் நீயும்
வாழ்ந்து காட்டத்தான்
கையில் உள்ள திறமைகள் உந்தன்
கணக்கில் வாராதோ
பொய்யாய் தோன்றும் தயக்கம் துடைத்தால்
பெருமை சேராதோ?
என்றோ யாரோ சென்னதை நீயேன்
இன்னும் சுமக்கின்றாய்
நன்றோ தீதோ முயன்று பார்க்க
நீயேன் மறுக்கின்றாய்
இன்றே உந்தன் கையில் உண்டு
எதற்குத் தவிக்கின்றாய்
முன்னேறத்தான் மண்ணில் வந்தோம்
முயன்றால் ஜெயிக்கின்றாய்