கத்திகள் கேடயங்கள்
கதைபேசும் களத்தினிலே
புத்தர்கள் நடத்துவதோ
புத்தகக் கண்காட்சி
*
பார்வைக்கு சுகமாக
பொய்நிலவு விற்கையிலே
சூரியன் கடை போட்டால்
சீந்துபவர் யாருமில்லை
*
செயற்கைப் பூக்களுக்கு
சாவில்லை என்பதனால்
சுயமறிந்தோர் கொடுப்பாரோ
சிரஞ்சீவி பட்டம்?
*
நூலிருக்கும் பட்டத்தை
நில்லென்று கைகாட்டும்
வாலில்லாக் குரங்குமனம்
வாலறிவு பெற்றிடுமோ?
*
ஓலா கார் ஊபர் காரில்
ஓயாமல் வழிசொல்லும்
கோலாகலப் பெண்ணே
கண்முன்னே வாராயோ…
*
தன்னா சனந்தன்னை
தான்செய்ய வாய்ப்பு வந்தால்
பொன்னா சனமாய்
படைத்து முடித்துவிடு
*
வீட்டுக்கு வீடு
வாசலுண்டு என்பவர்கள்
வீட்டுக்கு வீடிருக்கும்
வாஸ்துவை தான் சொன்னாரோ
*