கார் சாத்தூரை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஜேசுதாஸ் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது”தெய்வம் தந்த வீடு” என்ற பாடல்.அந்தப் பல்லவியில் துரத்தும் கேள்வி ஒன்று உண்டு.Haunting Question என்பார்கள்.”வாழ்வின் பொருளென்ன ..நீ வந்த கதையென்ன”என்கிற அந்தக் கேள்வி,வலிமையானது
சாத்தூர் தாண்டியதும் அழைக்கச் சொல்லியிருந்தார் டென்சிங்.மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்.நமது நம்பிக்கையில் தொடர்ந்து எழுதி வருபவர்.
அவருடைய நெடுநாள் நண்பரும், நமது நம்பிக்கை இதழின் தொடக்கநாள் தொட்டு துணையிருக்கும் நல்ல வாசகரும் நலம் விரும்பியுமான கோவில்பட்டி காளிதாஸ் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தேன்.
அவருடைய தாயார் மறைவையொட்டி துக்கம் கேட்பதற்கான பயணம் அது.பரிந்து விருந்தோம்பும் பண்பு கொண்ட அந்த அம்மையார் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைமை மனோநிலை அடைந்திருந்தார். எதையும் புரிந்து கொள்ளும் பக்குவமின்றி அடம் பிடிக்கும் தீவிரம் வளர்ந்திருந்தது.
ஊரெல்லையிலேயே டென்சிங் இரு சக்கர வாகனத்தில் காத்திருந்தார். சிலநிமிடங்களில் காளிதாசின் இல்லம் சென்று சேர்ந்தோம்.
அன்னையின் நினைவுகளை பதட்டத்துடன் பகிர்ந்து கொண்டார். தன் ஒரே மகனான காளிதாஸ் எதன் பொருட்டும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். குழந்தைகளை ஏமாற்றுவது போல வீட்டு வாசலில் செருப்புகளை விட்டுவிட்டோ அல்லது வாகனத்தை நிறுத்திவிட்டோ செல்வதை காளிதாஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சொல்வேந்தர் திரு. சுகிசிவம் மீது காளிதாசின் தாயாருக்கு மிகுந்த அன்பும் உரிமையும் உண்டு. திரு.சுகிசிவம்,கோவில்பட்டி வருகையில் அவர் வீட்டில் ஒருவேளையாவது உணவுக்கு அழைக்கப்படுவார்.காளிதாசின் பொறுமையைப் பார்த்து பலமுறை திரு.சுகிசிவம் என்னிடம் வியந்து சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் தொலைபேசியில் திரு.சுகி சிவத்திடம் காளிதாசின் தாயார் வெகுவாக சண்டை போட்டிருக்கிறார். “ஏம்பா!அன்னைக்கு எப்போ வந்தே சாமீ,சௌக்கியமா இருக்கியான்னு கேட்டுகிட்டேயிருக்கேன்.நீ பதிலே சொல்லாம நீ சொல்லாம நீ சொல்ல வந்ததையே சொல்லிக்கிட்டிருக்கே’ என கோபப்பட்டிருக்கிறார்.
சன் டி.வி.யில் ” இந்த நாள் இனிய நாள் ” ஒளிபரப்பாகிற போது திரையில் தோன்றிய பிம்பத்துடன் பேச்சுக் கொடுத்திருக்கிறார் அவர்.
இந்தத் தகவல்களினுடாக இன்னொரு செய்தியையும் சொன்னார் காளிதாஸ். திரு.டென்சிங் வீட்டுக்குப் பக்கத்தில் தெருவோரமாய் ஒரு மூதாட்டி கிடந்திருக்கிறார். டென்சிங் இட்டிலி வாங்கிக் கொடுத்திருக்கிறார்.உடல்நலமின்மை கண்டு சில மாத்திரைகளும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
ரொம்பவே முடியாமல் போகவும் காளிதாசுடன் கலந்து பேசி
முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்கப் போயிருக்கிறார்கள். இரத்த சம்பந்தம் உள்ளவர்கள் வந்து சொன்னால்தான் சேர்த்துக் கொள்ள முடியும் என்று சொல்லப்படவும்,டென்சிங் அலைந்து திரிந்து அந்த மூதாட்டியின் சில உறவினர்களைக் கண்டு பிடித்திருக்கிறார்.
அவர்கள் வந்து கையொப்பமிடவும் காளிதாஸ் பரிந்துரையின் பேரில் முதியோர் இல்லத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சில நாட்கள் கழித்து,நோய்வாய்ப்பட்டிருந்த அந்த மூதாட்டி முதியோர் இல்லத்திலேயே இறந்துவிட்டார் என்ற செய்தி வர,டென்சிங்கும் காளிதாசும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் நீண்ட யோசனைக்குப் பிறகு உடன்வர ஒப்புக் கொண்டனர். அவர்களை அழைத்துக் கொண்டு நண்பர்கள் இருவரும் முதியோர் இல்லம் சென்றனர்.
அங்கே இறந்த உடலை நீராட்டி புத்தாடை உடுத்தி மலர்மாலைகள் சூட்டி மதிப்புமிக்க வழியனுப்புதலுக்கு தயார்ப்படுத்தி வைத்திருந்தனர். எதிர்பாராத இந்தக் காட்சியில் நெகிழ்ந்து போன உறவினர்கள் இறுதிச் சடங்குகளை நிகழ்த்திய பின்னர் அந்த மூதாட்டியின் பிரிக்கப்படாத பை ஒன்று தரப்பட்டது.பிரித்துப் பார்த்தால் சுருள் சுருளாகப் பணம்.மொத்தம் முப்பத்து நான்காயிரம் ரூபாய்கள்!!
பையில் பணமிருப்பது தெரியாமலேயே வீதியோரத்தில் வாழ்ந்த அந்த மூதாட்டியின் வாழ்வை என்னென்று சொல்வது!! உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை என்ன செய்வதென்று கலந்தாலோசித்தார்கள்.அவர்களில் ஒருவர் சொன்னாராம்,
“உயிரோடிருக்கும் நேரத்தில் இவர்களை நாம் பார்த்துக் கொள்ளவில்லை. ஆனால் யாரென்றே தெரியாமல் கடைசி நாட்களில் பார்த்துக் கொண்டதோடு இறுதிச் சடங்குக்கும் மரியாதை மணக்க தயார் செய்த இந்த முதியோர் இல்லத்திற்கே இந்தப் பணத்தைத் தந்துவிடலாம்”. உறவினர்களின் உளமுவந்த ஒப்புதலுடன் அந்தத் தொகை முதியோர் இல்லத்திற்கே வழங்கப்பட்டது.
தன் இறுதி நாட்களில் தனக்கு இடம் கொடுத்தவர்கள் பயன்பெறும் விதமாய் அமைந்தது அந்த மூதாட்டியின் வாழ்க்கை. அடையாளம் கண்டு முதியோர் இல்லத்தில் சேர்த்த காளிதாசுக்கும் டென்சிங்கிற்கும் சொல்லொணா மனநிறைவு.
” எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது”
என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கு விளக்கமாய் இருந்தாலும் ,அதே கவிஞர் சொன்னது போல வாழ்வின் பொருள் விளங்கும் வாழ்ந்த அந்த மூதாட்டிகள் இருவருமே நம் வணக்கத்திற்குரியவர்கள்