மார்கழியின் விடியற்காலைகளை பாவையர் கோலங்களும் பாவை பாடல்களும் புலர்வித்த காலங்கள் உண்டு..பெண்கள் கூடி பெருமான் பெருமை பேசி நீராடப் போவதாய் பாவை பாடல்களின் கட்டமைப்பு. இது சங்க இலக்கியங்களின் “தைந்நீராடல்” மரபின் நீட்சி என்பார்கள்.
பாவை பாடல் ஒவ்வொன்றையும் பல்வேறு நிலைகளில் காட்சிப்படுத்திப் பார்ப்பது அவரவரின் பக்குவத்திற்கேற்றது.
திருவெம்பாவையின் முதல் பாடல் அப்படி காட்சிப்படுத்திப் பார்க்கத்தக்கது.”எல்லையிலாததும் அரியதுமான” பெருஞ்சோதிப் பிழம்பாகிய சிவபெருமானின் பெருமையை நான் பேசி வருகிறேன்.கூரியதும் பெரியதுமான கண்கள் கொண்ட பெண்ணே! கண் திறந்து பார்க்கவில்லையா?உன் செவிகள் கேட்காதா?”
இது பாடலின் முதல் பகுதி.
” சிவபெருமான் திருவடிப்பெருமைகளை வீதியில் படுவது கேட்டதுமே தன்னிலை மறந்தவளாய் மலர் தூவிய படுக்கையில்கிடந்து புரண்டவள் நினைவிழந்தாள்.விழுந்தாள்”.
இது பாடலின் இரண்டாம் பகுதி.
“அடடா! என் தோழி இத்தகைய பெருநிலை உற்றாளா?பாவை போன்றவளே! இதைக்கேளாய்!”
இது பாடலின் மூன்றாம் பகுதி.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்
இந்தப் பாடலைக் கூர்ந்து கவனித்தால் இருவர் பேசிக்கொள்வது தெரியும். ஒருத்தி தன் தோழியை எழுப்ப வந்தவள். பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே நின்றுபேசுகிறாள். சிவனின் சீர்மைகள் பாடும் குரல் கேட்டும் தன் தோழி எழவில்லையே என்னும் ஆதங்கம் அவளுக்கு.
இன்னொரு குரல் உள்ளிருந்து வருகிறது.சிவநாமங்கள் கேட்டதுமே தன்னிலை மறந்தவளாய் படுக்கையில் புரண்டவள் மூர்ச்சையானாள் என்கிறது. இந்தக் குரலுக்கு உரியவள் அந்தப் பெண்ணின் தாயாகவோ செவிலித்தாயாகவோ இருக்கலாம். உடனே கேள்வி கேட்ட பெண் தன் தோழியின் பத்திமையை உடன் வந்த தோழியிடம் வியந்த வண்ணம் நகர்கிறாள்.
இதில் ,படுத்திருந்த பெண் ஏன் மூர்சையானாள் என்பதில்தான் எத்தனையோ கோணங்கள் உள்ளன.
“மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்வீதிவாய்க் கேட்டலுமே”
இவள் ஏன் மூர்ச்சையானாள்?மார்கழியில் மாதேவன் வார்கழல்களை வாழ்த்தி வீதிவலம் வரும் வழக்கம்,இவளளறியாததா என்ன?
இவள் படுக்கையில் கிடந்தாளே தவிர,உறங்கினாளில்லை.சிவனீன் நாமங்களைச் சொல்லி வாழ்த்திய வண்ணம் கிடந்தவளுக்கு இரவுப் பொழுது, வைகறை என்னும் பேதங்கள் தெரியவில்லை. சற்றும் எதிர்பாராத விதமாய் தான் ஓதிக்கிடந்த சிவநாமங்கள் வீதியிலும் கேட்ட பரவசத்தில், அவள் மயங்கி விழுந்தாள்.
வாழ்த்திய வாழ்த்தொலிபோய்வீதிவாய்க் கேட்டலுமே”
என்னும் வரி இதைத்தான் உணர்த்துகிறது.இப்படியோர் இடம் திருப்பாவையிலும் உண்டு.இராமானுஜர் திருப்பாவை பாடல்களை ஓதிய வண்ணம் வீதிவலம் வரும்போது,தன் ஆசார்யர் திருமாளிகைக் கதவைத் தட்டினார்.ஆசார்யரின் புதல்வி அத்துழாய் வந்து கதவைத் திறந்ததுமே இராமானுஜர் மூர்ச்சையானார். அச்செய்தி ஆசார்யருக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் “உந்து மதகளிற்றன் பாசுரம் ஓதப்பட்டிருக்க வேண்டும்”என்றாராம்.
திருமாலின் திருப்பெயர் பாட திருமகளை வாயிற்கதவு திறந்தருளுமாறு விண்ணப்பிக்கும் பாசுரம் அது.”கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்” என்ற வரி பாடப்படும் பொழுது அத்துழாய் கதவைத் திறக்க, தான் ஓதிய வரியே உருக்கொண்டு வந்தாற்போலுணர்ந்த உடையவர் மூர்ச்சித்தார்.அதுபோல் தான் ஓதிக்கிடந்த சிவநாமங்கள் வீதியில் ஒலிக்க,அந்தப் பரவசத்தில் இந்தப்பெண் மூர்ச்சையானாள்.
இதில் இன்னொரு கோணமும் உண்டு.யோகமரபில் ஒன்றை உணர்த்துவார்கள்.ஒரு செயலை பருவுடல் நிகழ்த்தும் போது,சூட்சும உடலும் அதனை இன்னும் ஆழமாகச் செய்யும். ஹடயோகத்தில் ஒருவர் குனிய முயல்கிறார்,ஆனால் விரும்பும் அளவு குனிய முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.பருவுடல்தான் திணறும்.ஆனால் சூட்சும உடல் நன்றாக வளைந்து அந்தக் கிரியையை செய்யும்.அதுபோல ஒரே பெண்ணின் பருவுடல் படுக்கையில் கிடக்க அவளுடைய சூட்சும உடல் சிவநாமங்களைப் பாடி வீதிவலம் வருகிறது என்று கருதவும் இடமுண்டு.