தன் தந்தை மாமனாராகும் தருணம் குறித்த கேலிச்சொல் அக்காலத்துப் பெண்கள் மத்தியில் இருந்திருக்குமோ என்னும் யூகத்தை இப்பாடல் கிளப்பி விடுகிறது.
இப்படி வைத்துக் கொள்வோம்.ஒரு தந்தைக்கு இரண்டு பெண்கள். முதல் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தார். மகளை மணமகன் வசம் ஒப்படைக்கும் போது பெருமிதமும் உவகையும் அழுகையுமாய் கலவை உணர்ச்சிகளில் அவர் சொன்ன சொல் “உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்”.
அந்தக் குடும்பமே அந்நொடியில் ஆடிப் போனது. பின்னாளில் இளைய மகள் மனதில் கம்பீரமான தன் தந்தை கசிந்து சொன்ன அச்சொற்கள் சித்திரமாக நின்றுவிட்டன.
இப்போது தன் தந்தை தனக்குப் பெண்பார்க்கத் தொடங்கி விட்டார். சிவபக்தியில் திளைத்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு,தன் தந்தை சிவனடியார் அல்லாத ஒருவர் கையில் தன்னைப் பிடித்துக் கொடுத்து விட்டால் என்ன செய்வதென்ற கவலை வந்து விட்டது.
“மாப்பிள்ளை கறுப்போ,சிவப்போ, குள்ளமோ,உயரமோ அவர் சிவனடியாராக இருக்க வேண்டும்.திருமணத்திற்குப் பிறகும் நான் சிவத்தொண்டில் ஈடுபட வேண்டும்.இரவுபகலாய் சிவதரிசனம் செய்யும் பேறு வேண்டும். இவை கிடைத்தால் போதும் . மற்றபடி சூரியன் எந்தத் திசையில் உதித்தால் எனக்கென்ன.”
இந்தத் தொனியில் பேசத்தூண்டியது எது? ஒருவர் தன் வாழ்வில் எதற்கு முதலிடம் தருகிறார்,முக்கியத்துவம் தருகிறார் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. ஆங்கிலத்தில் Priority ன்பார்கள். இந்தப் பெண் தன் வாழ்வில் முக்கியத்துவம் தருவது சிவ வழிபாட்டுக்கே என்பதால் வாழ்வின் எல்லா ஏற்பாடுகளும் அதற்கு சாதகமாக அமைந்தாலே போதும் எனக் கருதுகிறாள்.
இல்லறக் கடமைகளில் இருந்த வண்ணமே ஓர் உயிர் தன் ஆத்ம சாதனைகளைத் தொடர முடியும் என்பது,குருமரபு புத்துயிர் பெற்றிருக்கும் இந்த நூற்றாண்டில் நன்கு தெரிகிறது.அதற்கு ஓர் எளிய பெண்ணின் மனதில் மலரும் உறுதியான சங்கல்பத்தின் ஊற்றம் எத்தகையது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. ஒருபெண் மட்டுமல்ல, இக்கூட்டத்தில் எல்லாப் பெண்களுமே இதே உறுதி உள்ளவர்கள் என்னும் உண்மையை எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் என்னும் வரி உணர்த்துகிறது.
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.