சைவத்தின் உயிர்நாடி சிவப்பரம்பொருளின் செங்கழல் இணைகளில் சென்று சேரும் நற்கதி. உயிரின் கடைத்தேற்றத்தை சிவபெருமான் திருவடிகள் எவ்வாறெல்லாம் நிகழ்த்துகின்றன என்பதை நிரல்படச் சொல்கிறார்.
அனைத்திற்கும் ஆதியாகவும் அந்தமாகவும் அமையும் திருவடிகளே,உயிர்களைத் தோற்றுவிக்கின்றன.உயிர்க்குரிய போகங்களையும் அருள்கின்றன.உயிர்களின் எல்லையாகவும் திகழ்கின்றன.மாலும் அயனும் காணவொண்ணா திருவடிகள் அடியவர்கள் உய்யும் விதமாய் வந்து ஆட்கொள்கின்றன.
அந்தத் திருவடிகளில் திளைக்கும் பாவனையில் மார்கழி நீராடுகிறோம் என்கின்றனர் பெண்கள்.
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.