சிவபெருமானுக்கு மாணிக்கவாசகர் பாடும் திருப்பள்ளியெழுச்சி திருவெம்பாவையின் இணைப்பதிகமாக காணப்படுகிறது. வாழ்வின் மூல முதலே சிவன் எனும் பொருளில் “போற்றியென் வாழ்முதல் ஆகிய பொருளே” என்று தொடங்குகிறார்.உயிரின் சிறப்பே அதற்குள் இருக்கும் இறைத்தன்மை. தனக்குள் இருக்கும் இறைத்தன்மையை எழுப்புவதும் அதனை எட்டுவதுமே உயிரின் மாண்பு.”வாழ்முதல் ஆகிய பொருளே” என்னும் விளி உயிரின் தன்மையில் உறைந்திருக்கும் சிவத்தை நோக்கியது.
பொழுது புலர்கையில் சிவபெருமானுக்கு மலரருச்சனை புரிய மலர்ந்த தாமரைகளை மாணிக்கவாசகர் கொண்டு வருகிறார். எங்கோ மலர்ந்த மலருமல்ல.ஏனோதானோ என பறித்ததுமல்ல. சிவபெருமானின் திருவடிகளுக்கு இணையான தாமரைகளைத் தேடியிருக்கிறார். ஆனால் அத்தனை அழகிய மலர்கள் அவனியிலே இல்லையென்பதால் திருவடிகளுக்கு துணையான மலர்களையே கொண்டு வர முடிந்தது” என்கிறார்.
பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி,
இந்த மலர்களைக் காணும்போதே அடியவர் தேடியதென்ன என்பதை
பெருமான் அறிந்து புன்னகை பூப்பான் என்பதால்
நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;என்கிறார்.
சிவபெருமானின் திருவடிகளை சென்றடையும் இலட்சியத்தோடு சேற்றுக்கு நடுவே தாமரை மலர்கள் மலரும் திருப்பெருந்துறையின் சிவனே என அடுத்த வரி விளிக்கிறது.
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !
பிரபஞ்ச சேற்றில் பிறந்தாலும் மாசுபடாத உயிர்களாகிய ஞானிகளை
இவ்வரி நினைவுபடுத்துகிறது.
இடபக் கொடியை உடையவனே!எங்களை அடிமையாகக் கொண்டவனே
திருப்பள்ளி எழுவாயாக என விண்ணப்பிக்கிறார்
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !