சிவபெருமான் திருப்பள்ளியெழும் கோலத்தை நுணுக்கமாக
விவரிக்கிறார் மாணிக்கவாசகர். ஒரு குழந்தை பிற நாட்களில்
துயில் எழுவதற்கும் தன் பிறந்த நாளில் துயில் எழுவதற்கும்
வேற்றுமை உண்டு.
கண்களைத் திறக்கும் முன்னரே அந்தநாளைக்குறித்த உவகைச்
சித்திரங்கள் குழந்தையின் மனதில் உருவாகின்றன.இமைகள்
மலரும் முன்னரே இதழ்கள் மென்னகையில் மலர்கின்றன.
பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளையைப் போலவே தினம் தினம்
துயில் எழுகிறான் சிவபெருமான்.இந்திரனின் திசை எனப்படும்
கிழக்கில் கதிரவன் தோன்றப் போகிறான்.அதற்கு முன்னே
சிவபெருமான் திருமுகத்தில் கருணைக் கதிர் எழ, கண்களாகிய
மலர்கள் மலர்கின்றன.
சிவபெருமான் திருவிழியின் கருமணிகள் போல வண்டுகள்
முரல்கின்றன.ஆனந்தத்தின் வடிவாகும் மலை போன்ற பேருமான்
அருளாகிய நிதியைத் தர எழுந்தருள வேண்டுமென இப்பாடல்
விண்ணப்பிக்கிறது.
அருணன் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்
அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக்
கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !