இந்தப் பாடலுக்கான மரபான உரைகளில் ஒன்று, பக்தியின் பரிணாமத்தை சுட்டுவதை பள்ளி மாணவனாக இருந்த போது வாசித்தேன். மகாவித்வான் தண்டபாணி தேசிகரின் உரை அது.
“கூவின பூங்குயில்” என்று பாடல்தொடங்குகிறது.பொழுது புலர்வதற்கு முன் கூவக் கூடியது கோழி என்பார்கள். மாணிக்கவாசகரே திருவெம்பாவை8 ஆம் பாடலில். “கோழி சிலம்ப,சிலம்பும் குருகெங்கும்” என்பார்.ஆனால் இங்கு முதலில் குயிலை யும் பின்னர் கோழியையும் மூன்றாவதாக குருகையும் நான்காவதாக வெண்சங்கையும் சொல்கிறார். இவை பறவைகளைக் குறிப்பன அல்ல, உயிரைக் குறிப்பவை என்பது பழைய உரை.
குயில்போல் கருமை கொண்ட மனம் சிவநாமத்தை சொல்லச் சொல்ல சிறிது சிறிதாய் மாசு நீங்கி வெண்சங்கு போல் தூய நிறம் பெறுகிறது என்பது இதன் உட்பொருள்.
இறைவனின் அளப்பரிய பெருமைகளைக் கேட்டு மலைப்பெய்தி,அவன் பால் பக்தி கொள்பவர்கள், அவன் மிகவும் எளிவந்த தன்மையனாய் , அன்பருக்கு அபனாய் இருப்பதைக் கண்டு வியப்படைகிறார்கள்.”யாவரும் அறிவரியாய்! எமக்கெளியாய்!” என்னும்வரி இதனைப் புலப்படுத்துகிறது.விடியல் வந்ததைச் சொல்லி திருவடி தரிசனம் தருமாறு சிவனை இறைஞ்சுவதாக இப்பாடல் அமைந்திருக்கிறது.
கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !