பக்தி கனிகையில் வருகிற பணிவு, அற்புதமானது. மனிதன் ஓர் எல்லை வரையில் தான் எவ்வளவு பெரியவன் என்பதை நிறுவவே முற்படுகிறான்.ஆனால் அவன் பக்குவம் அடைகிற போது தன்னினும் மேம்பட்ட இறையடியார்கள் பலரும் இருப்பதைக் கண்டு அவர் தம் பெருந்தொண்டுகளுக்குத் தலைவணங்குகிறான்.
சிவசந்நிதியில் பல்வகை அடியார்களையும் கண்டு மணிவாசகர் மனம் உருகிப் பாடுகிறார். இசைக்கருவிகளை இசைப்பவர்கள், ரிக் வேதம் ஓதுபவர்கள், தோத்திரப் பாடல்களை பாடுபவர்கள், தொழுபவர்கள்,அழுபவர்கள்,பக்திப் பெருக்கில் துவண்டு விழுபவர்கள்,தலைக்கும் மேல் கைகூப்பி உருகி நிற்பவர்கள்..இவர்கள் ம்த்தியில் என்னையும் ஆட்கொள்ள உனக்கு எவ்வளவு கருணை !!” என நெக்குருகி நிற்கிறார்.
தன்னை சிறியவராய் உணர்பவரே பெரியவர்கள் அல்லவா!
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !
சிந்தையில் நின்றது பக்தி மனம் !