தேவர்கள் அமுதத்தை அறிந்தவர்கள். அதன் சுவையை அறிந்தவர்கள். ஆனால் அவர்கள் ஒரு பழத்தின் சுவையை அறிந்தவர்களில்லை என எள்ளல் தொனிபடப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.
எந்தப் பழம் அது? திருமூலர் சொன்ன பழம்தான்.
”ஒன்று கண்டீர் இவ்வுலகுக்கொரு கனி
நன்று கண்டீர் அது நமசிவாயக் கனி
மென்று கண்டால் அது மெத்தென்றிருக்கும்
தின்று கண்டால் அது தித்திக்கும் தானே”
என்றார் திருமூலர். சிவக்கனி எவ்வளவு அருமையானது,எவ்வளவு சுவையானது என்பதையோ, சிவனின் திருவுரு எத்தகையது என்பதையோ தேவர்களும் அறிய மாட்டார்கள். அத்தகைய பெருமைக்குரிய சிவன்,திருவுத்தரகோச மங்கையையும் திருப்பெருந்துறையையும் ஆள்கிற சிவன் தாமாக வந்து தன் அடியார்களை ஆட்கொண்டுவிட்டான்.
அவனுக்கு தாங்கள் எவ்வாறு கைம்மாறு செய்ய இயலும்? அதையும் அவனைத்தான் கேட்க முடியும்” என்கிறார் மாணிக்கவாசகர்.
“அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
அரிதென, எளிதென”, அமரரும் அறியார்,
“இது அவன் திருவுரு; இவன் அவன்” எனவே;
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !”