இறைவன் தன் அடியவர்களை நெருங்கி வர அனுமதிக்கும்
இடம் பூமிதான்.வானகத்தில் தேவர்களுக்குஅவனை நெருங்கக் கூட
துணிவு கிடையாது. தன் அடியார்களுடன் தான் நெருங்கிப் பழக
வேண்டும் என்பதற்காகவே அவர்களை மண்ணில் வந்து வாழச்
செய்தானாம் சிவபெருமான்.”பாரில் நின்னை சந்திப்பவர்க்கெளிதாம்
எம்பிராட்டி நின் தண்ணளியே” என்கிறார் அபிராமி பட்டர்.
அவனுடைய அருளின் வள்ளன்மை
திருப்பெருந்துறையில் காட்சி தந்த கருணையில் வெளிப்படுகிறது.
அடியவர்கள் கண்களில் இனித்து களிப்பு தருகிற தேனாக இருக்கிறான்.
கடலில் கடைந்த அமுதாய் கரும்பாய் அடியாரின் எண்ணத்தில்
இருப்பவனாய், உலகின் உயிராய் திகழும் இறைவனை திருப்பள்ளி
எழ விண்ணப்பிக்கிறார்.
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !