திருமாலுக்கும் நான்முகனுக்கும் சிவபெருமானை நேரில் பார்த்து ஆக வேண்டிய காரியங்கள் எவ்வளவோ உண்டு. கயிலாயத்திற்குப் போகும் போதெல்லாம் அவர் இருந்தால் தானே!
64 திருவிளையாடல்கள் செய்ய ஓயாமல் மதுரைக்குப் போவது, நாயன்மார்கள் அறுபத்து மூவரை ஆட்கொள்ள அடிக்கடி கிளம்பிப் போவது, சித்தர்கள் அழைத்தார்கள் என்று போவது, பக்தர்கள் அழைத்தார்கள் என்று போவது, இதே வேலைதான் சிவபெருமானுக்கு.
கயிலாயத்திற்கு அடிக்கடி சென்று பார்த்து ஏமாந்து திரும்புவதே வழக்கமாகிவிட்ட திருமாலுக்கும் நான்முகனுக்கும், “நாமும் பூமியிலேயே பிறந்திருக்கலாமோ” என்று தோன்றிவிட்டது. அதுவும் மற்ற தலங்களை விட திருப்பெருந்துறையின் மேல் இருவருடைய கண்களும் பதிந்து விட்டன.
ஒரு மனிதனை ஆட்கொள்ள சிவபெருமான் மனைத வடிவில் குருவாக சென்று காட்சி தந்த தலத்தில் சென்று நாமும் பிறந்தால் என்ன என எண்ணும் விதமாக மண்ணுக்கு வந்தென்னை ஆட்கொண்ட கருணையின் அமுதமே என விளிக்கும் மணிவாசகர் இறைவனை திருப்பள்ளி எழுந்தருளுமாறு விண்ணப்பிக்கிறார்.
“புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு” என்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !