தமிழ்ச் சமுதாயத்தின் தொல்மரபுகளையெல்லாம் மீட்டெடுத்த களஞ்சியம் தைப்பாவை. கண்ணனைச் சொல்லும் போது “கதிர்மதியம் போல் முகத்தான்” என்றாள் ஆண்டாள். இதனை உளவாங்கிய கவிஞரோ
” எங்கள் சமுதாயம் ஏழாயிரம் ஆண்டு
திங்கள் போல் வாழ்ந்து செங்கதிர்போல் ஒளிவீசும்”
என்றெழுதுகிறார்.
சங்க இலக்கியத்தில் போர்நிமித்தமாய் தலைவன் பிரிந்து செல்ல, தலைவி
துயருற்றிருப்பது குறித்து நிறைய பாடல்கள் உண்டு.அந்த சாயலில் தைப்பாவையில் ஒரு பாடல்.வாளேந்தும் வீரன் பெண்ணைத் தொடும்நேரம் பார்த்து போர்முகம்
வரச்சொல்லி ஓலை வருகிறது.இவள்தனிமையில் துயர்ப்படுகிறாள்.
“வாளைத் தொடு காளை வடிவைத் தொடும் வேளை
வேலைக்கென ஓலை விரைவுற்றது-சென்றான்
நூலைத் தொடும் இடையாள் நோயுற்றனள் பாராய்
வேலைப்பழி விழியாள் வியர்வுற்றனள் காணாய்
காலைத் துயில் கொள்வாள் கங்குல் துயில் நீப்பாள்
சோலைப்பகை கொள்வாள் தூண்டிற்புழு ஆவாள்
ஆலந்தளிர்த் தத்தை அமைவுற்றிட இத்-தை
காலம்வரல்கூறாய் கனிவாய தைப்பாவாய்”
என்கிறார்.
காதல் கைகூடிய இணையரையும் தைப்பாவை காட்டுகிறது.காதல் கொண்ட தலைவனும் தலைவியும் நேர்பட சந்திக்கையில் நிகழ்பவற்றை நயமுடன் பாடுகிறார் கவியரசர்.
“வா என்றன இமைகள்; மண்நோக்கின விழிகள்
தா என்றன இதழ்கள்;தழுவென்றது மேனி
பார் என்றது பருவம் ;படை கொண்டது நாணம்;
நேர்கின்றது யாதோ..நிலை கொண்டது காதல்.
தேர்கொண்டொரு தெய்வம் தெரு வந்தது போலே
ஊர்கின்றவன் மனதில் உழல்கின்றது காமம்;
சீர்கொண்டவன் எதிரே சிலை கொண்டவள் வந்தாள்
யார் வென்றனர் அறிவாய்;அறிவாய தைப்பாவாய்” என்கிறார்.
மூவேந்தர்கள் பற்றிய பாடல்களில் சேரனைப்பற்றிய பாடல் தனிச்சிறப்பு வாய்ந்தது.
“இருள்வானில் நிலவிடுவான் நிலவாழ்வை இருளவிடான்
செருவாளில் கைபதிப்பான் கைவாளை செருவில்விடான்
மருள்மானை மனத்தணைவான் மனமானை மருளவிடான்
தரும்சேரன் பெற்றறியான் தழைக்கும்கோன் வஞ்சியிலும்
நிறையாயோ உலவாயோ நிலவாயோ தைப்பாவாய்”
என்னும் கவிதை சொல்லழகும் பொருளழகும் மிகுந்தது.
இப்படி தைத்திங்களில் பாடி மகிழ நாளுக்கொரு பாடலாய் தைப்பாவைநூலை உருவாக்கியிருக்கிறார் கவிஞர்.திருப்பாவை,திருவெம்பாவை ஆகியவற்றை பக்தி இயக்கங்கள் பரப்பியதுபோல், தமிழியக்கங்கள் தைப்பாவை நூலைப் பரப்பலாமே என்று தோன்றுகிறது.