ஓராசிரியர் பள்ளியிலே ஓட்டமில்லே ஆட்டமில்லே
யாராயிருந்தாலும் எப்போதும் அச்சத்திலே!
சார்வாளின் இருமலிலும் சங்கீதக் கார்வையின்னு
வாய்பாடு படிப்பதன்றி வேலையங்கே ஏதுமில்லே
வச்சதுதான் சட்டமவர் வகுத்ததுதான் பாடமுன்னு
உச்சியிலே கிறுக்கேறி ஊர்பகைக்கக் கெடந்தாலும்
லச்சையெதும் இல்லாத லட்சணத்த என்னசொல்ல:
கச்சைகட்டி மோதுகிற கிருத்துருவம் கொஞ்சமல்ல
பெட்டிக்கடை வாசலிலும் ரொட்டிக்கடை வாசலிலும்
வட்டிக்கடை வாசலிலும் வர்றவங்க போறவங்க
தட்டுக்கெட்ட பிள்ளைகளைத் தன்போக்கில் ஆட்டுவிக்கும்
கெட்டிக்கார வாத்தியார குத்திக்குத்திப் பேசுறாக
கால்வாசி தமிழ்படிச்சு குப்பைகளை அள்ளிவச்சு
மேல்மாடி நெரப்புறதே மேதாவித் தனமுன்னு
நூல்வலையில் பூச்சிபோல நூதனமாத் துள்ளுகிற
கால்சட்டைப் பொடிசுகளின் கூச்சல் பெருங் கூச்சலப்பா
ஏடெடுத்த வள்ளுவரு ஏதுந்தெரியாதவராம்
பாடவந்த கம்பனாரு பாமரர்க்கும் பாமரராம்
தேடிவந்த வாத்தியாரு தன்னைப்போல மண்ணுக்குள்ள
மூடியில்லா ஞானக்கடல் முன்னபின்ன இல்லையிங்கான்
தேர்வெழுதத் தேவையில்ல:தெய்வமுன்னு வாத்தியார
யாருரக்க சொன்னாலும் எல்லாரும் பாஸ்தானாம்
வேரோடிப் போயிருக்கும் வேதாந்தம் சித்தாந்தம்
ஊரறியப் படிச்சவரு ஒலகத்துல இவர்தானாம்
ஒத்தவேட்டி முண்டுடுத்தி உலவுகிற வாத்தியாரு
கத்துகுட்டி பசங்களையே கைப்புள்ள ஆக்கிகிட்டு
வெத்துவேட்டு சத்தத்தையே வீணையிசை என்றுசொன்னா
பொத்துகிட்டு வருஞ்சிரிப்பை பொத்திகிட்டு நடக்கணுந்தான்