ஆ.மாதவன் தமிழில் முக்கியமான படைப்பாளி. அவருக்கு தரப்பட்டுள்ள சாகித்ய அகாதெமி விருது காலந்தாழ்ந்து தரப்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதேநேரம், அவருக்கு தரப்பட்டுள்ள விருது, அவருடைய விமர்சன நூல் ஒன்றுக்காக என்பதுதான் விநோதம்.
அந்த ஆண்டின் சாகித்ய அகாதெமி விருதுக்கென வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் வெளியான நூல்கள்தாம் பரிசீலிக்கப்படும் என்ற முறையில் ஆ.மாதவனின் இந்த நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால்,அடிப்படையில் ஆ.மாதவன்,புனைவு எழுத்தாளர். அவருக்கு விருது தாமதமாகிக் கொண்டே போவதை குழுவில் ஒருவர் வலியுறுத்த அவரது விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய நூலுக்கு விருது தரப்பட்டுள்ளது.
கட்டுரைகள் என்று பார்த்தால் அவை ஆ.மாதவனின் திறனை வெளிப்படுத்துவதாக இல்லை. கால எல்லை என்று பார்த்தால் 1983ல் அவர் எழுதிய கட்டுரைகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.இந்த நூல் அவருடைய இலக்கிய மதிப்பை வெளிப்படுத்துவதாக இல்லை. மொழிபெயர்க்கப்பட்டால் விருதாளரை பிறர் மிக சாதாரணமாக எடை போடக்கூடிய அபாயம் இருக்கிறது.
பாரதிதாசனுக்கு அவர் கவிதைகளுக்காக சாகித்ய அகாதெமி தரப்படவில்லை. பிசிராந்தையார் என்னும் நாடகத்திற்காக அளிக்கப்பட்டது.கண்ணதாசனுக்கோ, சேரமான் காதலி என்னும் நாவலுக்காக அளிக்கப்பட்டது. இந்நிலை மாற வேண்டும். ஒரு படைப்பாளியின் முழுமையான ஆளுமை கணக்கிலெடுக்கப்பட்டு,அவரின் தனித்தன்மை எதில் வெளிப்படுகிறதோ அதற்கான அங்கீகாரமாய் விருது தரப்பட வேண்டும்.
பொருத்தமானவர்களுக்கு பொருத்தமான நேரத்தில் விருது தராமல் விடுவது அவமானம் என்றால் திறமையாளர்களுக்கு பொருத்தமில்லாத துறையில் விருது தருவதும் அவமானமே.
விருதுகள் பெற்ற நூல்களைவிட விருந்தாய்…மருந்தாய் அமையும் படைப்புகள் எப்போதும் மக்களால் மதிக்கப்படும்..காலத்தால் கௌரவிக்கப்படும்…..!