எது உங்கள் பாத்திரம்?
எதிர்மறை நேர்மறை போட்டி எப்போதும் இருக்கிறது.”எனக்கு நேர்மறை எண்ணங்கள் இருந்தாலும் என்னைச்சுற்றி இருப்பவர்கள்எதிர்மறை அதிர்வுகளுடன் இருக்கிறார்களே”என்கிற கேள்வியை
எத்தனையோ பேர் எழுப்புவதுண்டு.
உங்கள் நேர்மறை எண்ணங்கள் எவ்வளவு திடமாக இருக்கின்றன என்பதைப் பயிற்சி செய்து பார்க்கும் வாய்ப்புதான் இந்தச் சூழல். மற்றவர்கள் எதிர்மறை அதிர்வுகளுடன் இருப்பதை மாற்றுவது என்பது
நீண்டகாலத் தீர்வு.எதிர்மறை அதிர்வுகள் உங்களைத் தாக்காமல் பார்த்துக் கொள்வதே உடனடித் தீர்வு.
எத்தகைய சூழல்களில்,எத்தகைய மனிதர்களை எதிர்கொள்கிறீர்கள் என்பதன் அடிப்படையிலேயே
உங்கள் தாங்கும் திறனை நீங்கள் வடிவமைக்க வேண்டும். உதாரணமாக தொலைதூரப் பயணம்
ஒன்றில் குளிர்ந்த நீர் உங்களுக்குத் தேவைப்படுகிறது. கையில் இருக்கும் பிளாஸ்டிக் குடுவையில்
நிரப்பிக் கொள்கிறீர்கள்.கடும் ஜலதோஷம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பிளாஸ்டிக் குடுவையில்
கொதிநீரை நிரப்பிக் கொள்ள முயன்றால்குடுவை வளைந்துவிடும்.இப்போது உங்களுக்குத் தேவை
ஃபிளாஸ்க்.
தண்ணீரின் தன்மைக்கேற்ற பாத்திரங்கள் தேவைப்படுவது மாதிரி எவ்வகையான சூழல்களை
நீங்கள் எதிர்கொள்கிறீர்களோ அதற்கேற்ற மனநிலையை மலர்த்திக் கொள்வது மிகவும் முக்கியம்.
உங்களை நீங்கள் எவ்விதமான பாத்திரமாக வடிவமைத்துக் கொள்கிறீர்களோ அதற்கேற்ற சூழல்களை
நோக்கிச் செல்லுங்கள்.இப்போது நீங்கள் பிளாஸ்டிக் பாத்திரமாக இருக்கலாம்.உங்களை ஃபிளாஸ்க்காக
வடிவமைத்துக் கொள்ளாமல் வெளிச்சூழல்களின் கொதிநிலைக்காக வருத்தப்படாதீர்கள்.
எது உங்கள் இலக்கு?
நீங்கள் வழக்கமாக உணவு உண்ணும் இடம் நோக்கி காரில் பயணமாகிறீர்கள்.”ஆட்கள் வேலை செய்கிறார்கள்” என்ற அறிவிப்புப் பலகை
வழியில் தென்படுகிறது. கூடவே மாற்றுப்பாதைக்கான கைகாட்டிப் பலகையும் இருக்கிறது.வாகனத்தைத்
திருப்பிக் கொண்டு போனால் அது பெரிய சுற்றுவழி. ஆனால் வழியிலேயே மற்றோர் உணவகம் புதிதாக
உருவாகியிருக்கிறது. உள்ளே போய் அமர்கிறீர்கள். அந்த புதிய சூழலின் உற்சாகத்தில் வழக்கமான உணவை விட்டுவிட்டு வேறேதோ உணவுவகைகளை சாப்பிடுகிறீர்கள். அடுத்த ஆறுமணி நேரங்களில்
உடல்நிலை பாதிக்கிறது.
பாதை மாறியதில் மனம்மாறி பயணத்தின் திசை திருப்பலில் முடிவுகள் மாறினால் அதன் பாதிப்பு
நிச்சயம் இருந்தே தீரும். பாதை மாறினாலும் இலக்கு மாறாதவரா நீங்கள்?அப்படியானால் வெற்றி
நிச்சயம்.
எது உங்கள் பலம்?
ஆயுதங்களில் இரண்டு வகை. அஸ்திரம் என்பது ஒருவகை. சஸ்திரம் என்பது இன்னொருவகை.இருந்த
இடத்தில் இருந்தபடியே எய்யக்கூடியது அஸ்திரம்.கைகளில் வைத்துக் கொண்டே பயன்படுத்துவது சஸ்திரம்.அம்பு என்பது அஸ்திரம்.வாள் என்பது சஸ்திரம்.(அதனால்தான் பழங்காலங்களில் அறுவை
சிகிச்சையை சஸ்திர சிகிச்சை என்றார்கள்)
அஸ்திரப் பிரயோகத்தில் அசகாய சூரர்கள்,தங்கள் ஆயுதங்களைக் கூர் தீட்டுவதிலும்,ஆயுதத்தைப்
பயன்படுத்தும் கலையை இன்னும் கூர்மைப்படுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்திக் கொண்டே
இருப்பார்கள்.சஸ்திர வீரர்களின் சாகசங்களைப் பார்த்து தங்களை அவர்களுடன் ஒப்பிட்டு உயர்வாகவோ
தாழ்வாகவோ நினைக்க மாட்டார்கள்.
வாள்வீச்சுக்காரர்களும் அப்படியே.தங்கள் திறமைகளை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுவார்களே
தவிர அடுத்தவர்களுடன் தங்களை ஒப்பிட்டு மனம் குமைய மாட்டார்கள். ஏனென்றால் ஒரு யுத்தத்தில்
அனைத்துவகை ஆயுதப் பிரயோகங்களுக்கும் சமமான இடமென்பதை அவர்கள் அறிவார்கள்.
உங்கள் பலமும் அதன் பிரயோகமும் உங்களிடம்தான் இருக்கிறது.உங்கள் திறமையை கூர்செய்து
கொள்ளுங்கள். இந்த உலகுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியம் என்று நீங்களே உணர்வீர்கள்.
Excellent! Attitude and undestructed journey towads objectives are real strength