(கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆண்டுதோறும் நடத்தும் எப்போ வருவாரோ உரைத்தொடர் வரிசையில் 2016 தொடரின் நிறைவு நாளான 10.01.2016 அன்று சிவவாக்கியர் குறித்து உரை நிகழ்த்தினேன். அந்த உரையின் சில பகுதிகள்)
ஆன்மீகப் பாதையில் முன்னேறும்போது சில சக்திகள் திறமைகள் கைகூடும்.அவற்றை சித்திகள் என்பார்கள்.சிலர் அந்த சக்திகளிலேயே தேங்கிப் போய் விடுவதுண்டு.அவர்கள் சித்து வேலை செய்பவர்கள் என்னும் பெயரைப் பெறுகிறார்கள்.ஆனால் அந்த சித்திகளையும் கடந்து போகிறவர்கள் சித்தர்கள். அவர்கள் ஆன்மீகப் பாதையில் ஆகச்சிறந்த வைராக்கியத்துடன் வளர்ந்தவர்கள்.தம் சுய அடையாளங்களை முற்றாக இக்ழ்ந்து தம்மைதெய்வத் தன்மைக்கு முற்றாக ஒப்புக் கொடுத்தவர்கள்.
இவர்களின் தன்மையை விவரிக்கும் விதமாக ஒரு பாடல் உண்டு. சைவசித்தாந்த நூல்களில் முக்கியமான ஒன்று திருவுந்தியார். திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளியது . ஒரு பெண்ணை ஆண்பேய் பிடிக்கிறது என்றால் அந்தப் பெண்ணிடம் இருக்கும் பெண்குரல்போய்விடும். மெல்லிய இயல்புகள் போய் விடும். முரட்டுத்தனம் படிந்து விடும் . ஆண்குரலில் பேசும். அதுபோல் சிவத்தன்மைக்கு தம்மை முற்றாக ஒப்புக் கொடுத்தவர்கள்,தங்கள் உள்ளத்தை,உணர்வை,அறிவை முழுமையாக சிவத்தன்மை ஆட்கொள்ள ஒப்புக் கொடுப்பார்கள் என்பது அந்தப் பாடலின் கரு.
“பெண்ணைப் பிடிபோலும் ஆண்மக்கள் பேய்போலும்
கண்டாரே காண்பார் என்று உந்தீபற
காணதார் காணாரென்று உந்தீபற ”
சித்தர்களின் தன்மை இதுதான். நாம் லௌகீக முறையில் ஒரு பழமொழியை மேம்போக்காகக் கையாள்கிறோம்.ஒருவர் தன் மனம் போனபோக்கில் எல்லாம் போய்க்கொண்டிருப்பார் என்றால், “சித்தம் போக்கு சிவன் போக்கு” என்கிறோம். ஆனால் அந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்னவெனில் ஒரு சித்தனின் போக்குதான் என்றுமே சிவனுடைய போக்கு. சிவத்தன்மையால் முற்றாக முழுதாக ஆட்கொள்ளப்பட்டவர் சித்தர். அவர் சொல்லும் வாக்கியமெதுவும் அவர் வாக்கியமல்ல.அவை அனைத்தும் சிவவாக்கியம். சிவவாக்கியர் என்னும் பெயருக்குக் கூட இதுதான் காரணமாக இருக்க வேண்டும்.
ஆனால் சிவவாக்கியர் வாழ்க்கை குறித்து விதம்விதமான கதைகள் வழக்கிலிருக்கின்றன.குழந்தைகள் ‘ குவா குவா” என அழுதபடி பிறக்கையில் இவர் மட்டும் சிவா சிவா என்றபடி பிறந்தார் என்றொரு கதை உண்டு. சிவவாக்கியரின் பெற்றோர் இறைவனின் திருவுருவச் சிலைகள் செய்யும் தொழிலில் இருந்தவர்கள் என்றும் காசிக்கு சிவவாக்கியர் போன போது செருப்புத் தைக்கும் தொழிலாளி வடிவில் ஶ்ரீ ராமனே குருவாக வந்தார் என்றும் சொல்வார்கள். தன் குரு காற்றை உட்கொண்டு வாழ்வதைக் கண்டு,சிவவாக்கியர் தனக்கும் அந்த நிலை கைகூடச் செய்ய வேண்டுமென்று கேட்டாராம்.அதற்கு குருவானவர் “கூரையேறிக் கோழி பிடிக்காதவன் வானமேறி வைகுந்தம் போக முடியுமா” என்று கேட்டாராம்.
சஹஸ்ரஹாரமாகிய சக்கரமொரு மனிதனின் உச்சியில் இருக்கிறது. அங்கு குண்டலினியை கொண்டு செலுத்துவது யோக சாதனையின் உச்சம் . கோழி என்பது குண்டலினியைக் குறிக்கும்.தன் சஹஸ்ரஹாரத்தில் குண்டலினியை ஏற்றி யோக சாதனை செய்பவனே வீடுபேறு பெறுவான் என்பது அந்த முதுமொழியின் பொருள். பின்னர் குரு உபதேசம் பெற்ற சிவவாக்கியர் தன்னையுணர்ந்த சித்தரானார் என்பது அவருடைய வாழ்க்கை வரலாற்றில் இடம் பெறும் செய்தி. இதேபோல அவருடைய திருமணம் குறித்தும் சில செய்திகள் காணப்படுகின்றன.
அவருடைய குரு பேய்ச்சுரைக்காயையும் பிடிமணலையும் கொடுத்து சுரைக்காயை கசப்பு நீங்கச் சமைத்து மணலை சோறாக சமைத்துக் கொடுப்பவளே உன் மனைவி என்று சொல்ல, குறவர் இனப் பெண் ஒருவரைக் கண்டு உள்ளுணர்வின் உந்துதலால் அவரை சமைத்துத் தரும்படி கேட்க அவரும் சமைத்துக் கொடுத்தார் என்பார்கள். அப்போது சிவவாக்கியருக்கு ஐம்பத்தோரு வயதென்று போகரின் நூலொன்றில் குறிப்பு உள்ளது.
இந்த அம்சங்களைக் கடந்து, சிவவாக்கியர் இறைமையை உள்நிலை அனுபவமாக உணர்ந்தவர். எவ்வித அடையாளமுமில்லாத உயிராக நின்று தான் பெற்ற அனுபவத்தை எல்லா மனிதர்களும் பெற வேண்டுமானால் அதற்கு வழி அவரவர் தம் அடையாளங்கள் அழிய வேண்டும் என உணர்ந்தவர். மனிதர்கள் தங்கள் அடையாளங்களைத் தாண்டி வருவதற்கான வழிகளைக் காட்டும் கருவிகளாக தன் பாடல்களைத் தந்தவர்
இந்த அடிப்படைச் செய்திகளை மனதில் கொண்டு சிவவாக்கியரின் பாடல்களை அணுகலாம்
(தொடரும்)