கடந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில், அடையாளங்களை அழிப்பதே சிவவாக்கியரின் பாடல்கள் என்பதைப் பார்த்தோம். ஒவ்வொரு மனிதனும் சுமக்கும் விதம் விதமான அடையாளங்கள்,எத்தனையோ மனத்தடைகளை ஏற்படுத்துகின்றன.மற்றவர்களை விட தாம் உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் எத்தனையோ விசித்திரமான காரணங்களால் வருகிறது.
மெத்தப் படித்தவர்கள் தங்களை உயர்வாகக் கருதிக் கொள்கிறார்கள் .அவர்களிடம்
“சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்ப்பு வந்திளைத்த போது சாத்திரம் உதவுமோ” என்று கேட்கிறார்.
சிலர் எச்சில் கூட தீட்டு என எண்ணுவார்கள்.அவர்களிடம்
“ஓதுகின்ற வேதம் எச்சில்,உள்ள மந்திரங்கள் எச்சில்
போதகங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்” என்கிறார்.
பலருக்கும் சைவம்-அசைவம் என்பதை முறையே உயர்வென்றும் தாழ்வென்றும் எண்ணும் மனப்பான்மை உண்டு.
“ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
ஆட்டிறைச்சி கொன்று அன்றோ யாகம் நீங்கள் ஆற்றலே” என்கிறார்.
மதங்களின் பெயரால் சிலர் துவேஷம் பார்ப்பார்கள். அவர்களிடம்
” எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
அங்குமிங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ” என்கிறார்.
சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்ப்பவரை சாடும் சிவவாக்கியரின் பாடல் மிகவும் பிரசித்தமானது.
“பறைச்சியாவது ஏதடா பனத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பிலே இலக்கமிட்டு இருக்குதோ”
இவையெல்லாம் மனிதர்கள் வலிந்து சுமக்கும் அடையாளங்களையும் மனத்தடைகளையும் உடைக்கிற முயற்சி.
பெண்கள் மாதவிலக்கு நாட்களில் சில காரணங்களுக்காக சில காரியங்களில் இருந்து மட்டும் தள்ளி வைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களை அந்நாட்களில் முற்றாக தனிமைப்படுத்துவதும் அசூயைப்படுவதும் சிவவாக்கியர் போன்ற சித்தர்களுக்கு கடுமையான கோபத்தை உண்டு பண்ணுகிறது.ஒரு பெண் கருவுற்றால் மாதவிலக்கு நின்று விடுகிறது. குழந்தை பிறக்கும் வரை மாதவிலக்கு நிகழ்வதில்லை.இதை கருத்தில் கொண்டு சிவவாக்கியர் சொல்கிறார், “மனிதனே! உன் தாயின் மாத விலக்கு பத்து மதங்களாய் வரவில்லை. பின்னர் நீ பிறக்கிறாய். அப்படியானால் என்ன பொருள் தெரியுமா? மாத விலக்கின் தூமைதான் பத்துமாதங்கள் கழித்து இரண்டு கைகள் இரண்டு கால்கள் கொண்டு பிறந்து வந்து தூய்மை பற்றிப் பேசுகிறது” என்கிறார்.
ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கி ரச கந்தமும்
துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே” என்கிறார்.
சித்தர்கள் சமூகப் புரட்சி செய்தவர்கள்-செய்பவர்கள் என்கிறார்கள். ஆனால் சித்தர் நெறி சமத்துவத்தையும் தாண்டிய பெருநெறி. எல்லா உயிர்களும் ஒன்று என்பதை ஒரு போதனையாக மட்டுமின்றி உள்நிலை அனுபவமாகவும் உணர்ந்தவர்கள் அவர்கள்.எனவே வேறுபாடுகளைக் களைந்து தங்களை ஓர் உயிராக மட்டுமே உணர்வதன் மூலம் முக்தி பெற முடியுமென்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.சித்தர் நெறியில் சமூகம் சார் சமத்துவமென்பது பயணத்தின் முதல்படி மட்டுமே. அதுவே முடிவான இலக்கல்ல.