சிவவாக்கியரின் சூட்சுமமான பாடல்களும் அதில் சொல்லப்படும் கணக்குகளும் யோக ரகசியங்கள் ஆதலால் அவற்றை பொதுவில் ஆராய்வது முறையல்ல என்பதென் தனிப்பட்ட எண்ணம்.
அவை குறித்த பொதுவான புரிதல்கள் குரு மூலமாக ஆன்மீகம் பயிலும் ஆர்வத்தை புதியவர்களுக்கும், அந்நெறியில் நிற்பவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் உறுதியும் தரும்.அதே நேரம் அவருடைய பக்தியுணர்வும் நன்றியுணர்வும் வெளிப்படும் இடங்கள் அபாரமானவை.”தேங்காய்க்குள் இளநீர் ஏன் வந்ததென எவரேனும் சொல்ல முடியுமா?அதுபோல் இறைவன் எனக்குள் வந்து புகுந்து கொண்டான்.
அதன்பின் நான் உலகத்தாருடன் தர்க்கம் செய்வதில்லை” என்கிறார்.
“செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டனன்;
ஐயன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டபின்
வையகத்து மாந்தர்முன் வாய்திறப்ப தில்லையே”
சித்தர்மொழியின் கோபம் மட்டுமின்றி பக்தர் மொழியின் உருக்கமும் சிவவாக்கியர் பாடல்களின் சிறந்த அம்சங்கள்.
“பரம் எனக்கு நீயலாது வேறிலை பராபரா” என்னும் வரியை வாசித்தால் கண் கலங்குகிறது.
என்னைப் பெரிதும் கவர்ந்த இன்னொரு பாடல் சிவவாக்கியரின் மன்றாடலை உணர்த்துகிறது,
ஒரு வேங்கையைப் பிடிக்க வேண்டுமானால் ஓர் ஆட்டை கட்டிப் போட்டு கண்ணி வைப்பார்கள். ஆட்டைத் தின்ன வரும் வேங்கை மாட்டிக் கொள்ளும். அதுபோல் உலக இன்பங்களையும் செல்வங்களையும் காட்டி என்னை உலக வாழ்வில் சிறைப்படுத்தாமல் வீடு பேறுகொடு சிவனே என்று கதறுகிறார்.
“ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மனைப்படுத்தலாகுமோ
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னைநீ வகைப்படுத்த வேணுமே”
என்கிறார்.சிவவாக்கியர் குறித்த என் உரையின் சில குறிப்புகளை மட்டுமே இந்தக் கட்டுரைகளில் பகிர்ந்திருக்கிறேன். விரைவில் முழு உரையினையும் ஒலியேற்றம் செய்ய முயல்கிறேன்.