அடிகளின் காப்பியம் அளிக்கிற சேதி
கடைசியில் வெல்வது காலத்தின் நீதி
அரசியல் பிழைத்தால் அறம் கூற்றாகும்
கருதிய சதிகள் காற்றுடன் போகும்
அரங்கேற்றத்தில் ஆடல் கோலம்
தடுமாற்றத்தில் கோவலன் பாவம்
பொன்னைக் கொடுத்துப் பெண்ணை வாங்கலாம்
என்ன கொடுத்து உண்மை வாங்கலாம்?
தாழ்ந்ததைச் செய்தால் தாழ்வையே கூட்டும்
ஊழ்வினை அப்படி உருத்துவந்து ஊட்டும்
மாதவி பிணக்கு கண்ணகி வழக்கு
மாதர்கள் கைகளில் கோவலன் கணக்கு
மாதரி கவுந்தி ஆதரித்தாலும்
வீதியில் நிறுத்தும் விதிவிட்ட தூது
கூடா நட்பால் கெட்டது புத்தி
கூடல் நகரில் கழுத்துக்குக் கத்தி
ஆளும் மன்னவன் அவசரப்பட்டால்
மூளும் நெருப்பில் முற்றும் எரியும்
தேரா மன்னன் தவறுகள் செய்தால்
ஊரார் பார்க்க ஒருகுரல் எரிக்கும்
தானொரு போக்கில் தீர்ப்புகள் சொன்னால்
வானொரு போக்கில் விதியினை மாற்றும்
மாதவி வடித்த ஓலைகை மாறும்
காதலன் விடுத்த ஓலையாய் போகும்
கூத்துகள் பார்த்ததில் குழம்பிய அரசன்
ஆத்திரத்தாலே அறிவினை இழந்தான்
அரியணை அரசன் தரையினில் உருள
எரிமலை பின்னே யாவரும் திரள
கணப்பொழு துக்குள் காட்சிகள் மாறும்
கணக்குகள் தவறி கயமைகள் வீழும்
பெண்மையின் குரலென்று பேசிச் சிரித்தவர்
உண்மையின் குரலென உணரவே இல்லை
காலம் போனபின் கலங்குதல் எதற்கு
சீலம் உணர்த்துமே சிலம்பின் சிறப்பு