மார்புக்குக் கவசங்கள்
அணிகின்ற கவனங்கள்
மழலைக்குத் தெரியாதம்மா
மாதாவுன் கண்பார்வை
தனையன்றி உலகத்தில்
முழுக்காவல் வேறேதம்மா
ஊரெல்லாம் அறியுமே
உன்பிள்ளை நானென்று
உன்மௌனம் உதவாதம்மா
உயர்வேதம் சொல்கின்ற
எதுவுமுன் சொல்லுக்கு
உறைபோடக் காணாதம்மா
நாராக இருந்தாலும்
நளினமலர்ச் சரமாகி
நாயகி பதம்தீண்டுவேன்
நானெனும் சுமைதாங்கி
நான்மிகவும் இளைத்தேனே
எப்போது கடல்தாண்டுவேன்
தேரேறி வருகின்ற
தேவீநின் கண்பட்டால்
தேம்பும்மனம் தேறிடாதோ
தேடுவார் தேடவே
பாடுவார் தம்மையே
தேடிவரும் மாதங்கியே
சித்திர வீணையை
ஏந்திடும் நாயகி
சொக்கனின் உயிர்மீட்டினாய்
செந்தூரன் வெல்லவே
வேல்தந்த நாயகி
சூரனின் உயிர் வாங்கினாய்
முத்திரைப் பொன்னையே
மிழலையில் தந்தவள்
.முப்புரம் தழலாக்கினாய்
முந்திடும் சந்தங்கள்
தந்திடும் குருபரன்
மணிநாவில் தமிழாகினாய்
தத்துவம் யாவிலும்
நர்த்தனம் இடுபவள்
திருக்கட வூர் ஆள்கிறாய்
தன்னையே முன்னிடும்
பட்டரின் மொழியினில்
முடிவிலா முதலாகினாய்
நித்தமும் ஆரூரில்
நிகரிலா ஆசனம்
நீகொண்டு உலகாள்கிறாய்
நினைத்திடும் நொடியெலாம்
நேர்வரும் பைரவி
நவாக்ஷரீ மாதங்கியே