மரபின் மைந்தன் அவர்களுக்கு
வணக்கம்.
முதியோர் இல்லங்கள் பற்றிய சாடலும் முதியோர் இல்லங்களில் பெற்றவர்களை விடுபவர்கள் பற்றிய சாபங்களும் மேடைகளில், குறிப்பாக பட்டிமன்ற மேடைகளில் அதிகம் கேட்கிறோம். இன்று அயல்நாடுகளில் வேலைக்குப் போகிறவர்களுக்கு முதியோர் இல்லங்கள் வரப்பிரசாதங்கள்.இந்தியாவில் கூட கணவன் மனைவி வேலைக்குப் போகும் சூழலில் முதியோரில்லங்கள் பாதுகாப்பாக வசதியாக உள்ளன. இப்படியிருக்க இந்தவாதங்கள் அனாவசியமான குற்றவுணர்வை உருவாக்குகின்றன. இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? முதியோர் இல்லங்களில் பெற்றோரை விடுபவர்கள் பொறுப்பற்றவர்களா?
-சிவசுப்பிரமணியன்,ஓசூர்
“ஈட்டிய அனுபவக் களஞ்சியம் முதுமை
இதுபோல் தெளிவும் ஏதுமில்லை
வீட்டுக்கு வீடு முதியவர் இருந்தால்
தனியாய் நூலகம் தேவையில்லை”
முதுமை என்ற தலைப்பில் ஒரு கவியரங்கில் நான் வாசித்த
வரிகள் இவை. முதியவர்களைக் கொண்டாடும் விதமாக
சமூகம் ஒருகாலத்தில் இருந்தது. திசைமாறும் முதியோர் வாழ்வியல் அவர்களின் பட்டறிவு,
கேள்வி ஞானம், நெல் கொட்டிவைக்கப்பட்ட பத்தாயங்கள்போல்
பொன்மொழிகளின் பத்தாயமாய்த் தெரிந்த அவர்களின் பொக்கைவாய்கள், இவையெல்லாம் ரசிக்கப்பட்டும் மதிக்கப்பட்டும் இருந்தகாலகட்டத்தை விட்டு மெல்ல நகர்ந்து,மூத்த தலைமுறையை
அந்நியப்படுத்தும் போக்கு பெரும்பாலான இடங்களில் பெருகி
வருகிறது.
அமெரிக்காவில் டாலஸ் மாநிலத்தில் ஒரு நதிக்கரையோரம்
நான் சந்தித்த முதியவர் ஒருவரின் மேல்சட்டை முகப்பிலிருந்த
ஆங்கில வாசகம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது.”தாத்தாக்கள்சுவாரசியமான புராதனப் பொருட்கள்” என்பதுதான் அந்த வாசகம்.
கடலில் ஒரு கலம் திசைமாறுகிறது என்றால்,ஒன்று எரிபொருள்
தீர்ந்திருக்க வேண்டும்.அல்லது எந்திரத்தின் விசையை நம்பிய
காலம்போய் காற்றின் திசைமாற்றங்களுக்கேற்ப அந்தக் கலம்
அலைக்கழிக்கப்படும் நிலை உருவாகியிருக்க வேண்டும் தங்கள்
திசையைத் தீர்மானித்து “விர்”ரென்ற வேகத்தில் பயணித்த
கலங்கள் கிழங்களான பிறகு, தங்கள் பிள்ளைகளின் திசைகளுக்குமாறி மாறி இழுக்கப்பட்டு தள்ளாடுகிறார்கள் என்கிற அவதானிப்புஒருபுறம்.
தாத்தாக்களும் பாட்டிகளும்தட்டுமுட்டுச்சாமான்கள் போல,வீடுகளின் புழங்கப்படாதஅறைகளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இன்னொருபுறம்.
இவற்றுக்கும் மத்தியில் வயதின் சுமையோ வருத்தத்தின்
சுவடோ இல்லாமல் குதூகலம் குன்றாமல் உற்சாக ஊற்றுக்களாய் இருக்கும்
முதியவர்களும் உண்டு.தங்கள் வாழ்வின் சூழல்கள்
எப்படியெல்லாம் அமைய வேண்டுமென முன்கூட்டியே திட்டமிட்டதன் விளைவேஅவர்களின் இன்றைய வசந்தம்.
இவர்களில் முதிய வயதில் தனிக்குடித்தனம் போனவர்கள் உண்டு,தங்கள் வசதிக்கேற்ப முதியோர் இல்லங்களைத் தேர்ந்தெடுத்து சரியாக வழங்கப்படும் மருத்துவ கவனிப்பு,உணவு, பொழுதுபோக்கு பிரார்த்தனை என்று நிம்மதியாக வாழ்பவர்கள் உண்டு.
அயல்நாட்டில் பிள்ளைகள் அழைக்கும் பரவசமும் ஆரம்ப நிலைதான். அடிக்கடி அழைப்பு வந்தால் போக மறுக்கும் பெற்றோர்களும் உண்டு. எனவே முதியோர் இல்லங்களை முதியவர்கள் விரும்பி ஏற்கிற பட்சத்தில் அதில் எந்தத் தவறும் இல்லை.
முதிய வயதில் பெற்றோரை ஊரில் தவிக்க விட்டு நிகர சம்பளத்துடன் நகர வாழ்வில் சௌகரியமாய் வாழும் சிலரை நான் அறிவேன். அவர்களும் மேடைகளில் முதியோர் இல்லங்களை கேலி செய்பவர்கள்தான்.
என்றாலும் தாங்கள் விரும்பிய திசையிலிருந்து திருப்பப்பட்ட
நிலையில்,அமைந்திருக்கும் முதியோர் இல்ல வாழ்வு மேலும் சில வசதிகளுடன் இருப்பதை பல முதியவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். வளரும் சமூகத்தில், நாம் விரும்புகிறோமோ இல்லையோ, முதியோர் இல்லங்கள் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றன.
தூர தேசத்திலோ தொலைவிலுள்ள பெருநகரங்களிலோ பிள்ளைகள் வாழும் சூழலைப் புரிந்து கொண்டு விலகி நின்று வாஞ்சை காட்டும் பெரியவர்கள் இதனை தனிமையாக எண்ணி ஏங்குகிறார்களா ஏகாந்தம் என அனுபவிக்கிறார்களா என்பதும் அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
முன்னொரு காலத்தில் வனப்ரஸ்தம் என்றொரு நிலை இருந்தது.இன்று வாழ்வின் கடைசி நிமிடம் வரை பொருளாதாரத்தோடும் பொறுப்புகளோடும் போராடும் நிலை இருக்கிறது.
பணி ஓய்வு போலவே தன்னோய்வு எனும் தனிப்பெரும் நிலை நோக்கி மனது முதிர்கிறபோது வாழ்க்கை பழமுதிர்சோலையாய் கனியும்.