மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரின் ராஜநாயகம்.19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்டு 58 ஆண்டுகளுக்குப் பின் அச்சு வடிவம் கண்ட இந்த நூல் இப்போது உரையுடன் வெளிவந்துள்ளது.
தமிழ் செழித்த திருப்பனந்தாளில் பிறந்து 1954ல் மலேசியாவில் வந்து குடியேறிய முதுபெரும் புலவர்
ப.மு.அன்வர் அவர்கள் உரையெழுதியுள்ளார்கள்.
கடவுள் வாழ்த்தும் 45 படலங்களும் கொண்ட இந்நூல் வண்ணக்களஞ்சியப் புலவரின் விரிந்த வாசிப்பறிவையும் செறிந்த புனைவுத் திறனையும் வெளிப்படுத்துகிறது.
விருத்தப் பாடல்களும் வண்ணப் பாடல்களும் விரவி வருகிற இந்த அரிய படைப்பு வாசிப்பவர் இதயங்களை ஈர்க்கும் விதத்தில் உருவாகியுள்ளது.
நாஜநாயகம் என்று போற்றப்படும் சுலைமான் நபிகள் சின்னஞ்சிறுவராய் இருக்கும் போதே அவருக்கு ஆட்சிப் பொறுப்பைத் தர வேண்டும் என்னும் இறை விருப்பத்தை நிறைவேற்ற அவர் தந்தையாகிய அரசர் முற்படுகிறார்.ஆனால் அவரது மூத்த மகன்கள் எதிர்க்கிறார்கள்.
வயதில் இளையவராக இருந்தாலும் இறைவன் முடிவு செய்து விட்டால் அவர் பதவிக்கு வருவதை எவராலும் தடுக்க முடியாதென்பதை காவியத்தின் முதல்பகுதி முத்திரைச் செய்தியாகக் கொண்டுள்ளது.
இறைவனருள் பெற்றவர்களுக்கு மற்றவர்கள் இடையூறு செய்வதென்பது பொங்கும் நெருப்பை அணைக்க கற்பூரக் கட்டிகள் போடுஅது போலாகும். அந்த முயற்சிகள் அவர்களின் பெருமையைக் கூட்டுமே தவிர குறைக்காது என்றோர் அழகான உவமையை வண்ணக் களஞ்சியப் புலவர் வழங்குகிறார்.
“பொங்கும் அக்கினி,பெருங் கருப்பூரத்தால் மறைக்கின்
மங்குமோ? மிகவும் பெரிதாய் வளராதோ?
எங்குமாம் இறை அருள் உள்ளோருக்கு எவர்செயுமிடரும்
தங்கு சீர்த்தியைக் கொடுப்பதல்லால் அடந்தருமோ”
என்கிறார்.
கம்பனில் ஆட்சி ஏற்கப் போகும் சுக்ரீவனுக்கு இராமன் சொல்லும் அறிவுரை மிகவும் சுவையான பகுதி.அதுபோல் 170 வயதில் மரணம் நெருங்குவதை உணர்ந்த தாவூது நபி தன்மைந்தர்களையும் அரசாளப் போகும் சுலைமான் நபியையும் அருகே அழைத்து சொல்லும் அறிவுரைகள் இந்த நூலில் அற்புதமாக அமைந்துள்ளன.
மைந்தனென்று உதித்த ஒண்கண் மணியிலொண் மணியே கேண்மின்
அந்தலில் விளையாடல் சொல் நகை பரிகாசம் செய்தல்
சிந்தை கொள் வெகுளி ஏதும் செய்திடாது ஒழிமின் -செய்யில்
புந்தியில் தெளியும் ஆலோசனை எல்லாம் போக்குமாறே
ஒருபொருள் கடவுளுக்கு அச்சம் உறுவது எப்பொழுதும் நெஞ்சில்
கருதுதல் ஒழியா வண்ணம் கனவினும் தியானம் செய்மின்
மருவிய உலக வாழ்க்கைப் பேறெலாம் வயங்கத் தந்தே
இருவினை அகற்றி மேலாம் பதவியும் ஈவதாமே”
என்பவை போன்ற அரிய வழிகாட்டுதல்கள் இதில் உள்ளன.
திருக்குறட் கருத்துகளையும் பொருத்தமான இடங்களில் புலவர் அழகாகக் கையாள்கிறார்.எந்த அரசன்,தன் செவிகள் கசக்கும்படியாய் வரும் விமர்சனங்களைப் பொறுத்து ஆட்சி புரிகிறானோ அவனுடைய குடையின்கீழ் இந்த உலகம் தங்கும் என்பது திருக்குறள்
செவிகைப்ப சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கிற் றுலகு
என்னும் வள்ளுவர் வாக்கை பொன்னேபோல் போற்றும் புலவர்
“செவிக்குள்ளே கசக்க வார்த்தை பொறுத்துத் தீங்கு அஞ்சுவோர்கள்
கவிக்குவெண் குடையோர் செங்கோல் இயற்றிடக் கடவர்”
என்று விருத்தத்தில் அழகாகப் பாடுகிறார்.
இயல்பாக நடைபெறும் காட்சி ஒன்றினை வேறுவிதமாகப் பொருள் கொள்ளுதல் தற்குறிப்பேற்ற அணி எனப்படும் . நாட்டுப் படலத்தில் அப்படியொரு காட்சியை அழகாகக் காட்டுகிறார். குரங்கு மாங்கனியைப் பறிக்கப் போகிறது. பொதுவாகவே ஒரு மரத்தில் குரங்குகள் தேர்ந்தெடுக்கும் பழங்கள் மிகவும் சுவைமிக்கவையாக இருக்கும். குற்றாலக் குறவஞ்சியில் திரிகூட ராசப்பக் கவிராயர் ‘மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்று பாடியது அதனால்தான்.
அந்தக் குரங்குகளை நோக்கி சிலர் கல்லெறிகிறார்கள்.பதிலுக்கு குரங்கு அவர்களை நோக்கி மாங்கனிகளை எறிகிறது. அவர்கள் மகிழ்வாக உண்ணுகிறார்கள்.
குரங்கின் இந்தச் செய்கை எப்படி இருக்கிறதென்றால்தெளிந்த ஞானிகளைப் பழித்து மூடர்கள் வீணான உரைகளை சொன்னாலும் ஞானிகள் பதிலுக்கு பயன்மிக்க நயவுரைகள் சொல்வது போல் இருக்கிறது என்கிறார்
காணும் இன் கனியை விரும்பி வெம்முகவெண் கவியினைக் கல்லினால் எறிவர்
பேணி அங்கது மாங்கனியினால் எறிய விழுமுனம் பிடித்தினிது உண்பார்
பூணுநல் தெளிவுள்ளவர் தமைப் பணிய நாணிப் புல்லவர் சினமெழும்ப
வீணுரை கொடுத்துப் பயன்படும் உரையை வெளிப்படுத்துவது இணையாக”
இப்படி பல வகைகளில் நயமும் நல்ல சிந்தனைகளும் விறுவிறுப்பான சம்பவங்களும் கொண்டுள்ளது ராஜநாயஹம். பல்வேறு வகையான யாப்புகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாடல்களை பதம் பிரித்துப் போட்டிருந்தால் வாசிப்பவர்களுக்கு இன்னும் பயனுள்ளதாய் இருந்திருக்கும்