( திருமதி சித்ரா மகேஷ் கேட்டுக் கொண்டபடி அமெரிக்க நண்பர்கள் வெளியிடும் திருவள்ளுவர் மலருக்கு அனுப்பிய கவிதை)
என்னென்ன ஐயங்கள் எழுந்த போதும்
எதிர்பாரா நிகழ்வுகளில் அதிர்ந்த போதும்
தன்னிலையே அறியாமல் துவண்ட போதும்
தயக்கங்கள் மனதுக்குள் திரண்ட போதும்
பொன்னென்றும் மண்ணென்றும் பதைத்த போதும்
பொறுப்புகளில் போராட்டம் பிறந்த போதும்
என்னருகே வள்ளுவரே நீங்கள் என்றோ
எழுதிவைத்த குறளிருந்தால்…அதுவே போதும்!!
இத்தனையும் ஒருமனிதன் எழுத்தா என்றே
எந்நாளும் மனிதகுலம் வியந்து பார்க்கும்
தத்துவமா? அரசியலா? தனிப்பண்பாடா?
துறவறமா?மனையறமா?எதுவானாலும்
ஒத்தபடி விரித்துரைத்த ஒருநூல் இந்த
உலகத்தின் பொதுமறையாம் குறளே ஆகும்
வித்தகரே !வள்ளுவரே !உம்மைப்போன்ற
விந்தையிங்கு மறுபடியும் நிகழவில்லை!!
தனிமனிதன் வாழ்வுக்குத் தோழன் நீங்கள்
தழைக்கின்ற கல்விக்கு தீபம் நீங்கள்
கனியிருக்க காயெதற்கு என்று கேட்டீர்
காலமின்று எமைப்பார்த்து அதையே கேட்கும்
தனியொருநூல் திருக்குறளை உணர்ந்தால் இங்கே
தேடிப்போய் கற்பதற்குப் பிறநூல் இல்லை
இனியொருவர் நிகரில்லை என்னும் வண்ணம்
இலங்குகிற குறளரசே ! வணக்கம்..வாழ்க!