பரந்து விரிந்த அந்தப் பள்ளி மைதானத்தின் நடுநாயகமாய், அந்த மேடை இருந்தது. மைதானத்தில் மக்கள் அமர மிகப்பெரிய பந்தல் இடப்பட்டிருந்தது.மைதானத்தில் நிறையபேர் குழுமியிருந்தனர். பெரும்பாலும் பெரியவர்கள்.நடுத்தர வயதினர். கொஞ்சம் இளைஞர்கள்.
அதே பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்கள் மைதானத்தின் நடுவே அமர்ந்திருந்தனர். காக்கி டிரவுசர். வெண்ணிற அரைக்கை சட்டை. அவர்களில் ஒருவனின் பற்களில் கிளிப் மாட்டப்பட்டிருந்தது. பக்கத்தில் இருந்த சிறுவன் சிறு வேப்பங்குச்சியால் கீழே அமர விரிக்கப்பட்டிருந்த சாக்குப் படுதாவை நோண்டிக் கொண்டிருந்தான்.
மேடையில் பலரும் வந்து அமரவும் மைதானம் அமைதியாகியது.ஓரிரு நிமிடங்களில் சட்டையணியாமல் மேல்துண்டு மட்டும் அணிந்திருந்த ஒரு பெரியவர் எழுந்து ஒலிபெருக்கி முன்னர் வந்து நின்றார்.
“கம்பன் வாழ்க!” என்று குரல் கொடுக்க, அவை “வாழ்க வாழ்க” என்று குரல் கொடுத்தது. “கம்பன் புகழ் வாழ்க” என்றார். மீண்டும் அவை “வாழ்க வாழ்க” என்றது.”கன்னித் தமிழ் வாழ்க”என்றார். அவை, “வாழ்க வாழ்க” என்றது.
கிளிப் அணிந்த சிறுவன், அந்தப் பள்ளியில் அந்த ஆண்டுதான் எட்டாம் வகுப்பில் வந்து சேர்ந்திருந்தான்.தன் நண்பனிடம் “கதிரு,யாருடா இவுரு?” என்றான். “இவர்தாண்டா கம்பன் அடிப்பொடி” என்று கிசுகிசுத்தான் கதிர்வேல்.”ஏண்டா சட்டை போடாம வந்திருக்காரு?”
“தெரியலைடா! வருஷா வருஷம் இப்படித்தான் வருவாரு!” இருவரும் வாய்பொத்தி சிரித்துக் கொண்டனர்.
கதிருக்கு மேடையில் இருந்த பலரின் பெயர்களும் தெரிந்திருந்தன.”குடுமி வைச்சிருக்காரு பாரு! அவர் பேரு ராதாகிருஷ்ணன். குண்டா உட்கர்ந்திருக்கறவர்தான் க.கு.கோ. என அவ்வப்போது ரகசியமாய் அறிமுகம் செய்துகொண்டே இருந்தான்.
பெரியவர்கள் பேசிய விஷயங்கள் சுவாரசியமாய் இருந்தன.அடுத்த ஆண்டே அந்தப் பள்ளியில் ஒரு கலையரங்கம் உருவானது. முன்னாள் மாணவர்கள் சங்கம் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதற்கு பணம் வசூலித்துக் கொடுத்தனர்
மைதானத்தில் நடந்து கொண்டிருந்த விழா கலையரங்கில் ஆண்டுதோறும் நடக்கத் தொடங்கியது. கிளிப் போட்ட சிறுவன் கம்பன் விழாவிற்காக அமைக்கப்படும் தொண்டர் படைக்குப் பேர் கொடுத்தான்.பேச்சாளர்களுக்கு தண்ணீர்,தேநீர் கொடுத்தல்,அவர்களின் தேவைகளை கவனித்தல்போன்ற வேலைகளை விரும்பிச் செய்தான். கம்பன் கழகம் நடத்திய பேச்சுப் போட்டிகளிலும் மனப்பாடப் போட்டிகளிலும் பங்கேற்றான். பரிசுகள் பெற்றான்.
கம்பன் விழாவில் கலந்து கொள்ளும் அறிஞர்கள் அன்புடன் பழகினர்.பட்டிமண்டபத்தில் பேச்சாளர்கள் நேரம் கடந்து பேசும்போது மணியடிக்கும் வேலைக்கு உயர்ந்தான்.
அவனுக்குள் விதையாய்க் கிடந்த இலக்கிய ஆர்வம் வீறு கொண்டு வளர்ந்தது. ஆண்டுகள் உருண்டோடின. கவிஞனாய் பேச்சாளனாய் அடையாளம் காணப்பட்டான். தாயகம் தாண்டியும் அயல்நாடுகளில் கம்பன் விழாக்களுக்கு அழைக்கப்பட்டான். தமிழகத்தில் சில பகுதிகளிலும் சுவிட்சர்லாந்திலும் கம்பன் விழா கவியரங்குகளுக்கு தலைமை தாங்கினான்.
மலேசியா.பாரீஸ் என்று பல நாடுகளில் கம்பன் கழக மேடைகளில் பேச அழைக்கப்பட்டான். கம்பன் கழகங்கள் விருது வழங்கின.
இப்போது அதே பள்ளி வளாகம். அதே கலையரங்கம். கம்பன் விழாவுக்கு விழாமங்கலத்தில் சிறப்பு விருந்தினராய் கலந்து கொள்ளப் போகிறான்.அந்தக் கழகம் கோவை கம்பன் கழகம்.அந்த கலையரங்கம்,நானி பல்கிவாலா கலையரங்கம். அந்தச் சிறுவன்…இவன்தான்
தத்தித் தவழ்ந்து தமிழ் பயின்ற முற்றத்தின் அழைப்பை இவன் தலைவணங்கி ஏற்கிறான்.