(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் முதல்பகுதி)
மேலாண்மை என்னும் சொல்,கடந்த நூற்றாண்டில் குறுகிய எல்லையில் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது .பலரும் அலுவலக மேலாண்மை என்பது கோப்புகளுடனும் நிறுவனவிதிகளுடனும் தொடர்புள்ள ஒன்றென்றே கருடியிருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் விளிம்பெல்லையிலும்,இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் மனித வளத்துறை புத்தொளி கொண்டு புறப்பட்ட போதுதான் மேலாண்மை என்பது மனிதர்கள் சார்ந்தது, உளவியல் சார்ந்தது, தகவல்கள் சார்ந்தது என்றெல்லாம் உணரத் தொடங்கினர்.
இந்தத் துறைகளில் மேலாண்மை குறித்து கவிச்சக்கரவர்த்தி கம்பர் தெளிந்த பார்வை கொண்டிருந்ததை,அவருடைய காவியம் வழி உணரலாம்.பொதுவாக எவையெல்லாம் எல்லை மீறிப் போகுமோ அவையெல்லாம் எல்லைக்குள் நின்று தம்மைத்தாமே நிர்வகித்துக் கொள்வதை கம்பர் ஒரு சமூகத்தின் சிறப்புக்கான இலக்கணங்களின் வரிசையில் வைக்கிறார்.
“ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசலம்பு முலையவர் கண்னெனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்றணி கூறுவாம்”
பொதுவாக திசைமாறிப் போகக் கூடிய ஐம்புலன்களும் பெண்களின் கண்களும் நெறிக்குட்பட்டு நிற்கும் கோசல நாட்டின் ஆற்று வளம் கூறுகிறேன் என்கிறார் கம்பர். இது ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை சுட்டுகிறது.
” பொறிகளின் மீது தனியரசாணை ” என்று பாடிய மகாகவிக்கு கம்பரே அடியெடுத்துக் கொடுத்திருக்கக் கூடும்.
இதனை ஏன் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடுகிறார்? ஆறு தனக்கான கரைகளை தானே வகுத்துக் கொண்டு தன் பாதையை தானே உருவாக்கி நடப்பது போல் அந்நாட்டு மக்கள் தங்கள் உணர்வுகளையும் செயல்களையும் தாங்களே நிர்வாகம் செய்து கொண்டு வாழ்ந்தனர் என்பதை கம்பர் குறிப்பாக உணர்த்துகிறார் போலும்!!
இன்று அறிவே பலம் என்று பேசப்படுகிறது. கல்வி ஒழுக்கத்திற்கும் அறிவுக்குமான களமாக அமைய வேண்டும்.கல்வியின் வழியாக அறிவும் அன்பும் தருமமும் எந்த சமூகத்தில் வளர்கிறதோ அதுவே முழுமையான சமூகமாக மலரும்.
கல்வி என்பது பாதுகாப்பான ஊதியத்திற்குரிய பாதையாய் மட்டுமே பார்க்கப்படுகிற இடத்தில் தனிமனிதப் பண்புகளை சீரமைக்கும் கருவியாக கல்வி செயல்பட வழியில்லை.
தன்னைத்தானே மேலாண்மைசெய்து கொள்கிற சீரொழுங்கு மிக்க மனிதனாய் ஒருவன் திகழ அவன் வெறுமனே கல்வி கற்றிருந்தால் போதாது. அந்தக் கல்வி எந்த விதத்தில் தொழிற்பட வேண்டும் என்பதையும் கம்பர் விளக்குகிறார்.
ஏகம் முதல் கல்வி முளைத்தெழுந்து எண்ணில் கேள்வி
ஆகம்முதல் திண்பணை போக்கி அருந்தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து
போகம் கனியென்று பழுத்தது போலுமன்றே”
என்கிறார். கேள்வியறிவு, தவம் அன்பு, தருமம், இந்நன்னெறிகள் சார்ந்த இன்பம் ஆகியவற்றுக்கு வழிகாட்டுவதே கல்வி. ஒருவன் தன்னைத்தானே மேலாண்மை செய்து கொள்ள,இத்தகைய கல்வி அவசியம்.
இந்தக் கல்வி சமூக மேலாண்மையை மட்டுமின்றி சமத்துவத்தையும் கொண்டு வருகிறது. பொருளியல் சமத்துவம் மட்டுமின்றி அறிவுசார் சமத்துவமும் ஒரு சமூகத்தில் சாத்தியம் என்பதை கம்பர் உணர்த்துகிறார்.
கல்லாது நிற்போர் பிறரின்மையின் கல்வி முற்றி
வல்லாரும் இல்லை;அவை வல்லர் அல்லாரும் இல்லை;
என்னும் சமத்துவம் அது.
மனித உணர்வுகளையும் உறவுகளையும் முரண்பட்ட எதிரெதிர் உணர்வுகள் ஒரே இடத்தில் வெளிப்படும் வேளையில் அந்த சூழலை நிர்வாகம் செய்வது மேலாண்மையின் முக்கியமான கடமைகளில் ஒன்று.
சமூகத்தில் ஒரு பதட்டமோ கலகமோ நிலவுகிறபோது, நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் அந்த சூழலின் தாக்கத்தால் உந்தப்பட்டு செயல்பட வாய்ப்புண்டு. Being carried away என ஆங்கிலத்தில் சொல்வார்கள்.அந்தச் சூழலில் அவர்கள்சொல்லும் ஒவ்வொரு சொல்லும் சமூகத்தால் உன்னிப்பாக அவதானிக்கப்படும்.
இராமன் இலக்குவனோடும் சீதையோடும் வனம் புகும் முன்னர் நகரெல்லையில் நின்று கடைசியாகப் பேசுவது சுமந்திரனிடம்தான். தந்தைக்குச் சொல்ல வேண்டியவற்றையெல்லாம் சொன்ன இராமன், தன் தாயர்கள் மூவருக்கும் தன் வணக்கங்களைத் தெரிவிக்க சுமந்திரனைப் பணிக்கிறான்.
அப்போது இயல்பாகவே சமூகத்திற்கு கைகேயி பால் இருக்கும் கோபம் சுமந்திரனுக்கும் இருக்கிறது. இராமன் தன் அன்னையருக்கு வணக்கம்சொன்னதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் போது கைகேயியையும் இராமன் வணங்கினான் என்று சொல்லாமல் விட்டுவிட்டால் என்ன செய்வது?எனவே, தான் தன் தாயர் மூவரையும் ஒருவருகொருவர் கூடுதல் குறைச்சல் இல்லாமல் சம வணக்கம்செலுத்தியதைத் தெரிவிக்குமாறு அழுத்தம் கொடுத்து குறிப்பிட்டு சொல்கிறான் இராமன்.
“முறைமையால் எற் பயந்தெடுத்த மூவர்க்கும்
குறைவிலா என் நெடுவணக்கம் கூறி,பின்
இறைமகன் துயர்துடைத்து இருத்தி மாடென்றான்
மறைகளும் மறைந்து போய் வனத்துள் வைகுவான்”
அயோத்தியின் பட்டத்தரசிகளில் மன்னவனின் முதல்த்தேவியாகிய கோசலை ஆளுமைப் பண்புகள் நிறைந்தவளாக சித்தரிக்கப்படுகிறாள். அவளை “திறம்கொள்கோசலை” என்று கம்பர் வர்ணிக்கிறார்.
பெரும்பாலும் சமநிலை குலையாத கோசலை தன் மகன் காடாளப் போக வேண்டும் என்னும் செய்தியை மகன் வாயிலாகவே கேட்டு நிலை குலைகிறாள்.பரதனை சந்திக்கும் வரையில் பரதன் வஞ்சினமுரைக்கும் வரையில் அவள் தன் சமநிலையை மீட்டுக் கொள்ளவில்லை.
தனக்கேற்ற தடுமாற்றத்தைச் சொல்கையில்
“அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால்” என்கிறாள்.
இருமுறை அஞ்சும் அஞ்சும் என்று சொல்வதில் இருவேறு பொருட்கள் உண்டு. ஒன்றுஅச்சத்தால் ஒரே சொல்லை இருமுறை சொல்வது. மண்டோதரி கூட இறந்து கிடக்கும் மகனைப் பார்த்து,
” அஞ்சினேன் அஞ்சினேன் சீதை என்னும் அமுதின் வந்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றே”
இன்னொரு பொருள், இராமனை ஈன்றவள் என்பதால் அவளைக் கண்டு பஞ்சபூதங்களும் அஞ்சுமாம். பூதங்கள் ஐந்தும் கண்டு அஞ்சும் இவளுடைய ஆருயிர் இராமனைப் பிரிந்து எப்படி வாழ்வதென அஞ்சும் என்றும் அதற்கொரு பொருள் சொல்லலாம்.
இந்தக் கோசலை பரதன் முதலாய அனைவரோடும் இராமனைக்காண வனம் வந்து சேர்கிற போது குகனைக் காணுகிறாள்.
அவனை அறிமுகம் செய்து வைக்கும் குகன் இவன் இராமனுக்குத் துணைவன்,எனக்கும் இலக்குவனுக்கும் சத்ருகனனுக்கும் மூத்தவன் என்று உருகிப் பேசுகிறான்
” இன்துணை இராகவனுக்கு;இலக்குவற்கும் இளையவற்கும்
எனக்கும் மூத்தான்
குன்றனைய திருநெடுந்தோள் குகனென்பான் இந்நின்ற குரிசில்”
என்று பரதன் சொல்லவும்
“நீவீர் ஐவரும் ஒருவீராய் அகலிடத்தை நெடுங்காலம் அளித்திர்”
என்கிறாள் கோசலை.
இதில் வேடிக்கைஎன்னவென்றால் இராமன் தன்னை தன் சகோதரன் என அறிவித்ததை குகன் பரதனுக்கோ கோசலைக்கோ சொல்லவில்லை. ஆனால் அவனுடைய அன்பறாக் கோலம் கண்டே இருவரும் குகனுக்குரிய இடம் என்னவென்று தீர்மானிக்கிறார்கள். இராமன் திருவாய் மலர்ந்து தந்த இடத்தை இவர்கள் இருவரும் உறுதிப்படுத்துகிறார்கள். இலக்குவனும் குகனைப் பார்த்த மாத்திரத்தில் “தாயினும் நல்லான்” எனமிகச்சரியாக எடைபோட்டது இங்கே நினைவுபடுத்திக் கொள்ளத்தக்கது.
ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்தில் அவனை எடைபோடுவதும்,அவனுக்குரிய இடத்தை வழங்குவதும் மேலாண்மைப் பண்பின் மேன்மையான் அம்சங்கள் என்பது இச்சம்பவம் வழி உறுதிப்படுகிறது.
(தொடரும்)