(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி)
ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குண இயல்பை எடைபோடும் ஆற்றல் என்று வரும்போது அனுமனை தாண்டிச் செல்ல இயலாது.முதன்முதலாக இராம இலக்குவரைப் பார்த்ததுமே,
” தருமமும் தகவுமிவர் தனமெனும் தகையரிவர்
கருமமும் பிறிதொரு பொருள் கருதியன்று;அது கருதின்
அருமருந்து அனையது;இடை அழிவு வந்துளது,அதனை
இருமருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்”
என அனுமனால் துல்லியமாகக் கணிக்க முடிகிறது.
இடர்நிலைப் பேராண்மை என்னு ஒரு பிரிவு மேலாண்மைத் துறையில் உண்டு. இதனை நிர்வாகவியல் உரையாடல்களில் fire fighting என்பார்கள்.மிகவும் சவாலான சூழலைக் கையாளும் முறைமை சமயோசிதத் திறனை அடிப்படையாகக் கொண்டது.
சுக்ரீவனுக்கு முடிசூட்டிய பிறகு, நான்கு திங்களில் படையுடன் வரப்பணித்து இராம இலச்க்குவர் செல்கின்றனர். சுக்ரீவன்சொன்னபடி வரவில்லை. இராமனுக்கு வந்த சினம், இலக்குவன் வழி பெருஞ்சினமாக வெளிப்படுகிறது. அவன் கோபமாக வருவதை அனுமன் தாரையிடம் சென்று சொல்ல, தாரை சுக்ரீவனின் நெடுநீர் மறவி மடி துயில் ஆகியவற்றைச் சுட்டி கடிந்து கொள்கிறாள். ஆனால் அந்த நிலையை அவள் சமாளிக்கும் விதம்தான் அற்புதமானது.
தன் தோழியர் சூழ தாரை எதிரே வரவும்,அதிரப் புகுத இலக்குவன், பெண்கள் வருவதைப் பார்த்து வேகம் தணிந்து தலைகுனிந்து நிற்கிறான். இப்போது அவனிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும், அவனுள்ளம் கொள்ளும் விதமாக சொற்களை சொல்ல வேண்டும் .
“இராமனை விட்டுப் பிரியாத நீங்கள் எவ்விதம் தனியாக வந்தீர்கள்” என்று மெல்லிய குரலில் தாரை கேட்டாள். “இமிர்ந்து பார்த்த இலக்குவன் கைம்பெண் கோலத்தில் தாரைஅன்பின் வடிவாய் நிற்கக் கண்டு தன் தாயரின் நினைவு வர உள்ளம் உருகுகிறான். இந்த இடைவெளியில் தாரை இலக்குவன் அமைதி பெறும்படி சமாதானங்கள் சொல்ல,அதன்பின் சுக்ரீவன்வந்து சூழலைக் கையாள்கிறான்.
“ஐய! நீ ஆழி வேந்தன் அடியிணை பிரிகிலாதாய்
எய்தியது என்னை”
என்று தாரை கேட்ட மாத்திரத்தில் நிமிர்ந்து பார்க்கிறான் இலக்குவன்.
” ஆர்கொலாம் உரைசெய்தார் என்று அருள்வர,சீற்றம் அஃக
பார்குலாம் முழுவெண் திங்கள் பகல்வந்த படிவம் போலும்
ஏர்குலாம் முகத்தினாளை இறைமுகம் எடுத்து நோக்கி
தார்குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைந்து நைந்தான்”
கம்பர் செதுக்கும் இந்த சித்திரம் பேசாத கதைகளெல்லாம் பேசுகிறது. .
முன்னதாக சுக்ரீவனுக்கு முடிசூட்டிவிட்டு இராமன் சொல்லும் அறிவுரைகள் ஆட்சியாளர்களுக்கான அற்புதப் பாடங்கள்.
“புகையுடைத்து என்னின் உண்டு பொங்கனல் அங்கென்று உன்னும்
மிகையுடைத்து உலகம்;நூலோர் வினயமும் வேண்டற்பாற்றே;
பகையுடைச் சிந்தையார்க்கும் பயனுறு பண்பின் தீரா
நகையுடை முகத்தையாகி இன்னுரை நல்கு நாவால்;
செய்வன செய்தல்-யாண்டும் தீயன சிந்தியாமை
வைவன வந்த போதும் வசையில இனிய கூறல்
மெய்யன வழங்கல்;யாவும் மேவின வெஃகல் இன்மை
உய்வன ஆக்கித் தம்மோடு உயர்வன உவந்து செய்வாய்”
என்பனவெல்லாம் படித்து மனப்பாடம்செய்தவர்கள்தான் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்கிற சட்டமே கொண்டு வரலாம்.
கம்பராமாயணத்தின் சிறந்த தனித்தன்மை என்னவெனில் அதில் மூல இராமனாகிய பரம்பொருளும் தசரத இராமனாகிய அவதாரச் செம்மலும் தேவை ஏற்படும் போதெல்லாம் மேவிப் பேசுவதுதான் என்பார் அறிஞர்.அ.ச.ஞா. அவர்கள்.இராமனை ஆட்சியை ஏற்றுக் கொள்ளும்படி பரதன் பல வகைகளிலும் பேசுகிறான். பரதனுக்கு மட்டும் புரியும் வண்ணம் “நீ பிறந்த போதே ஆட்சி உனக்கு உரியது” என்று இராமன் நினைவூட்டுகிறான்.
‘வரனில் உந்தை சொல் மரபினால்-உடைத்
தரணி நின்னதென்று இயைந்த தன்மையால்
உரன் நீ பிறந்த போது உரிமை ஆதலால்
அரசு நின்னதே ஆள்க ”
என்கிறான்.
பரதன் அசரவில்லை.
” என்னது ஆகில் இன்று தந்தனன்
மன்ன போந்து நீ மகுடம் சூடு” என்கிறான்.
ஒருவழியாக பரதனை அமைதிப்படுத்திவிட்டு நிமிர்ந்தால் ஆசிரியராகிய வசிட்டர் தன் மாணவனை மிரட்டத் தொடங்குகிறார்.
“ஆசிரியராகிய நானே ஆணையிடுகிறேன்” என்று தொடங்க
“ஆறிய சிந்தனை அறிஞ!உரை கூறுவது ஒன்றுளது!”
என அடக்கமாகத் தொடங்கும் இராமன், பேச்சோடு பேச்சாக “பிரம்மனின் மகனே!” என்னும் விதமாய் ” தேன்தரு மலரோன் சிறுவ” என்கிறான். வசிட்டர், பிரம்மாவின் மகன். பிரம்மாவோ திருமாலின் மகன். வந்திருப்பது யாரென்று தெரிந்தும் வசிட்டர் எல்லை மீறிப் பேசும் போது இராமன் மெல்லிதாக ஒரு தட்டுத் தட்ட வேண்டியிருக்கிறது. இவையெல்லாம் நிர்வாகப் பண்பின் முக்கிய அம்சங்கள்.
(தொடரும்)