(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி)
ஒரு நிறுவனம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் குறிப்பிட்ட வணிக வாய்ப்பைப் பெற வேண்டுமென்றால் அதற்கென்று சில நியதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும். அந்த நிறுவனத்தின் உயரத்திற்குப் பொருந்தாதவாறு மிக எளிய மனிதர்களிடம் சில சான்றாவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தால் அதனைச் செய்தே ஆக வேண்டும்.
சுக்ரீவனின் நட்பினை வேண்டிப் பெறுதல் இராமனின் தகுதிக்கு உகந்ததல்ல என்பதை வாலியே சொல்கிறான்.
இராமன் யாருடைய துணையும் தேவைப்படாத ஒரு மாவீரன் . கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவன்.அவன் சுக்ரீவனின் துணையைத் தேடியதே விசித்திரம்.
புயலைப் பற்றும் பொங்கெரி போக்கியோர்
முயலைப் பற்றுதல் என்ன முயற்சியோ”
என்று கேட்கிறான் வாலி. ஆனால் வாலியைக் கொல்லும் ஆற்றல் இராமனுக்கு உண்டா என்று தெரிந்து கொள்ள,மராமரங்களைக் காட்டி இந்த ஏழு மரங்களில் ஒன்றையாவது துளைக்க மாட்டயா என்று கேட்கிறான் சுக்ரீவன்.
என் அம்பு முனைக்கு எது இலக்கென்று பரசுராமனையே கேட்ட என்னைப் பார்த்தா இந்த சவாலை வைக்கிறாய் என்று இராமன் சிலிர்த்தெழவில்லை.சிரித்துக் கொண்டே ஒரே கணையில் ஏழு மரங்களையும் எய்கிறான்.
பதறிப் போன சுக்ரீவன்
வையம்நீ வானும் நீ மற்றும்நீ மலரின்மேல்
ஐயன்நீ ஆழிமேல் ஆழிவாழ் கையன் நீ
செய்யதீ அனையாத் தேவும்நீ நாயினேன்
உய்யவந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய்
என்று விழுந்து வணங்குகிறான். தன் பெற்றி அறியாதாரிடம் உறவாட நேர்ந்தாலும் அவர்கள் பேதஐமை பொறுப்பதன் மூலமே அவர்களை வழிக்குக் கொண்டு வர முடியும் என்கிற நுட்பமும் கம்பரின் கைவண்ணம் வழியே நமக்கு விளங்குகிறது