Ra-1-180x180( இசைக்கவி ரமணன் அவர்களின் நதியில் விழுந்த மலர் கவிதைத் தொகுப்புக்கு எழுதிய அணிந்துரை)

பயணம் போகும் பாணன் ஒருவன், பகல் பொழுதொன்றில் மரநிழலில் ஒதுங்கி,கட்டு சோற்றினைப் பிரித்துண்டு,நீரருந்திசௌகரியமான சாய்மானத்தில் ஏட்டுச்சுவடியில் எழுதிப்பார்த்த வரிகள் இவை.அகம்கூட்டும் அவதானிப்பில் முகம்காட்டும் பல்லவிகளின் காது திருகி இழுத்துவந்து கவிதைகளாக்கிய எக்காளம் எல்லாப் பக்கங்களிலும் ஒலிக்கிறது.வாழ்க்கையின் மூலம் தேடித்திரியும் சாதகன் ஒருவனின் வாக்குமூலங்கள் இவை.எனவே வடிவம் குறித்தோ அடர்த்தி குறித்தோ அச்சமின்றி அவை வெடித்துக் கிளம்பி வெளிவருகின்றன.

இசைக்கவி ரமணனை நன்கறிந்தவர்கள் இந்தக் கவிதைகளின் அடிநாதமாய் அவருடைய அந்தரங்கப் பாடல் ஒலிப்பதை உணர்வார்கள்.மற்றைய மதிப்பீடுகளைவிட மன மதிப்பீடுகள் இந்தக் கவிதைகளின் எடையறியும்.

“ஊரே ஒதுக்கும் போதும் அன்பே
ஊறிப் பெருகி வருகிறதே!
உண்மைத் தீயின் உச்ச நாவினில்
உயிரின் நர்த்தனம் தொடர்கிறதே!”

என்னும் நிலையை எட்டிப் பிடிக்க முயலும் முயற்சியே முனைப்புடைத் தவம்.

அதனால்தான்,
“என் இருப்பை
என்னால்கூடக் கருத முடியாதபடி
சின்னஞ்சிறு துளிதான் நான்.
ஆனால் என் காத்திருத்தல்
எந்த முனிவனின் கடுந்தவத்திற்கும் இளைத்ததில்லை”

என்று ரமணன் சொல்வதன் உள்ளீட்டை உணர முடிகிறது.

யோகிராம் சுரத்குமார் குறித்து கவிஞர் இளந்தேவன் ஒருமுறை எழுதினார்:
“நீ-தாகம் எடுக்கும் ஆறுகளுக்கும் தண்ணீர் தருகிற வானம்
நான் – தரையிலிருந்தே அதிலே கொஞ்சம் தாங்கிக் கொள்கிற ஏனம்
நீ-விசிறிக்காம்பை செங்கோலாக்கிய விசித்திரமான யோகி
நான் -வீசும் காற்றில் வெம்மை சேர்த்து வேகும் ஒருசுகபோகி” என்று.

குரு எவ்வளவு பெரியவர் என்பதைக் கண்டுணரும்போதே நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று புலப்படுவதே முதல் அக தரிசனம். “நீயும் நானும்”என்ற கவிதையில் ரமணன்,
“நீ யோகி
நான் ரோகியான போகி
நீ வெளிச்சம்
நான்,நானே இடறும் இருட்டு” என்கிறார்.

தியானமோ என்ற கவிதையும் ஆலமரக்குகை என்ற கவிதையும் அவருடைய ஆழமான அனுபவங்கள்.
சொல்ல முடியாத சொல்லி முடியாத தரிசனங்கள்.

ரமணனின் அத்தனை வெளிப்பாடுகளுக்கும் அடித்தளம் அமைக்கும் ஆன்மீக அனுபவங்களைத் தாண்டிவருகிறோம். ஒரு கவிஞனின் கூரிய அவதானிப்பில் தட்டுப்படும் தட்டுமுட்டுச் சாமான்கள் வெறும் பட்டியலாய் இல்லாமல்பாட்டியலுக்குள் வருவதையும் காண முடிகிறது.உரிய நிறுத்தத்தை வந்தடைந்த ரயிலில் என்னென்ன நடக்கும்என்னென்ன இருக்கும் என்றெழுதுகிறார்.

“பரிசோதகரின்
தூக்கமுடியாத ஜாதிக்காய்ப்பெட்டி
எப்போதும் மணல்நெருடும் தளத்தில் பரபரக்கும்
காலியான தண்ணீர் பாட்டில்களின்
கழுத்தைத் திருகும் நாராசம்…
ஏணியில் இறங்கத் தெரியாமல்
கடைசிப்படி நழுவி ‘பொத்தென்று விழும் பொத்தையர்”
என்றொரு பட்டியலை எழுதுகிறார்.

ஏற்கெனவே இலக்கியம் எழுதிக்காட்டும் பதில்களுக்கு புதிய கேள்விகளை ரமணன் கேட்கிறார்.
மாலைக்கும் இரவுக்கும் இடைப்பட்ட வேளையை அந்தி என்கிறோம்.
“மாலை மறைந்தது அந்தி எழுந்தது “என்கிறார் கவியரசு கண்ணதாசன்
‘இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்தி”என்கிறார் கவிஞர் வைரமுத்து.

ரமணனோ,
“கள்ளக் காதலர்கள்போல்
வெளிச்சமும் இருளும் தழுவிக் கிடக்கும் இந்த
வேளைக்கு என்ன பெயர் வைப்பது?” என்கிறார்.
இது அந்தியா,அதிகாலைச் சந்தியா என்றறியாத லயிப்பில் எழுதப்பட்ட வர்களென்று உய்த்துணர
வேண்டியிருக்கிறது.

தன் இசைப்பாடல்களில் வானம்போல் வெளிப்படையாய் பந்தி வைக்கும் பொருண்மைகளை
தன் கவிதைகளில் பொதியில் மறைத்த விடுகதைபோல் பொத்தி வைத்திருக்கிறார் ரமணன்.

“கம்பிகள் வழியே கட்டி நிலவு
பாலாய் ஒரு பாய்போடும்
வேகமாய்ச் செல்லும் மேகங்கள்
கீழே விரையும் நிழல்கள்”..
என்றெல்லாம் எழுதிக் கொண்டே வரும்போது,

“புழக்கடை செல்ல இருட்டைத் தடவி
எட்டுவைத்துச் செல்லும்போது
போர்வைக்குள்ளே புணர்ந்த உடம்புகள்
பொசுக்கென்று உறைந்து கொள்ளும்”

என்பன போன்ற வரிகள் கூட்டுக் குடும்பத்தின் நள்ளிரவை நம்முன் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

“உடை நீங்க அம்மணம்
உடல்நீங்க நிர்வாணம்”

“வாழ்க்கை என்பது
ரகசியமும் அம்பலமும்
கண்ணெதிரே கலவி புரியும்
அற்புதம்”

போன்றவை இவர் எழுதிக்காட்டும் இயல் வரையறைகள்.

இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை “பார்த்தன் பார்வையில் பரந்தாமன்”.

“நெஞ்சமெனும் வானத்தின் நிலவே கண்ணன்
நேரிலவன் உயிர்நண்பன்;கும்பிடாலோ
கொஞ்சவரும் சிறுகுழந்தை;தவறுசெய்தால்
கொட்டுவதில் குளவிதோளைக் கொடுக்கும் தோழன்.
விஞ்சிக்கொண்டேயிருக்கும் விஸ்வரூபன்
வீரமிக்க சாரதி விளங்கா மாயன்
வஞ்சகத்தில் கைதேர்ந்த மன்னன் எங்கள்
வாழ்வினொளி;யசோதைக்கோ சின்னப்பிள்ளை”

பாரதியின் கண்ணன் பாட்டு வகுத்த பாட்டையில் விரைந்து செல்கிறது இந்த விருத்த ரதம். இசைப்பாடல்களும் மரபுக்கவிதைகளும்தான் இசைக்கவி ரமணனின் பலங்கள் என்பதை இந்தக்கவிதை நினைவுபடுத்துகிறது.

“மின்னுக்குத் தருமமது மழையாய்ப் பெய்தல்
பெய்தமழைக்குத் தருமம் பின்னிச் சேர்தல்
இன்னீருக்குத் தருமம் நதியாய்ச் செல்லல்
இழைநதிகட்குத் தருமம் கடலில் சேர்தல்
வன்கடலுக்குத் தருமம் நிலத்தைத் தாங்கல்
நிலத்திற்கோ தருமமெனில் எனைநினைத்தல்
நின்தருமம் போர்த்தொழிலே அறிவாய் பார்த்தா
நேரமுனக் கதிகமில்லை ஏறு தட்டில்”

என்று கண்ணனின் குரலாய் கவிதை பிலிற்றும் ரமணன்
கட்டொழுங்கு மிக்க வடிவங்களிலேயே கரைபுரள்கிறார்.

மரநிழலில் சாய்ந்து தன் மன ஓட்டங்களை எழுதிப்பார்த்த ஓலைகளை சூரியனுக்குக் கீழே வைத்துவிட்டு பாதையைத் தன் பாடல்களால் நனைக்கப் பயணம் கிலம்புகிறான்.காற்றில்
கலந்து வரப்போகும் கானங்களுக்காகக் காத்திருக்கிறோம் நாம்!!

நூலின் தலைப்பு ; நதியில் விழுந்தமலர்
வெளியீடு: விஜயா பதிப்பகம் கோவை 1
விலை ரூ.70/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *