( நமது நம்பிக்கை மாத இதழில் ஒவ்வொரு மாதமும் கடைசிப் பக்கத்தில் என் கவிதை இடம்பெறும். பெரும்பாலும் அந்தப் பக்கம் வண்ணப் பக்கமாகவே அமையும். ஒரு மாதம் மட்டும் வெவ்வேறு விளம்பரங்கள் வந்ததால் வடிவமைப்பு நிர்வாகத்தில் கடைசிப் பக்கம் கறுப்பு வெள்ளையாக அமையும் என்று முடிவெடுத்தோம். எதிர்பாராத இந்த சமரசத்தை, திட்டமிட்டு நடந்தது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த நினைத்து இந்தக் கவிதையை எழுதிக் கொடுத்தேன்)
கறுப்பு வெள்ளை புகைப்படத்தில்
கனவின் வண்ணம் நூறு
கறுப்பு வெள்ளை திரைப்படத்தில்
காவியங்கள் நூறு
கறுப்பு வெள்ளை கனவுகள்தான்
காணுகின்றோம் நாமும்
கறுப்பு வெள்ளை சித்திரங்கள்
காலம் தாண்டி வாழும்
வண்ண வண்ணப் பூக்கள் உண்டு
வேரின் வண்ணம் என்ன?
கண்கள் ரெண்டும் கறுப்பு வெள்ளை
ஆன போதும் என்ன
விண்ணில் என்றும் கறுப்பு வெள்ளை
வந்து போவதென்ன?
எண்ணிப் பார்த்தால்சதுரங்கத்தில்
இருக்கும் நிறங்கள் என்ன?
வயது போக மனிதன் தலையில்
வண்ணம் கறுப்பு வெள்ளை
உயர்வு தாழ்வு பேதம் விட்டால்
உலகம் கறுப்பு வெள்ளை
உயரம் தொட்டால் வண்ணம் தாண்டி
உண்மை கறுப்பு வெள்ளை
தயக்கமின்றி எழுதும் கவிதைத்
தாளும் கறுப்பு வெள்ளை