(நண்பர் திரு.என்.சொக்கன்,வெண்பாவில் வல்லவர்.ஓரிரு நாட்களுக்கு முன் சிவன் குறித்து போதாது போதாது போ என்னும் ஈற்றடியுடன் சில வெண்பாக்களைப் பதிந்திருந்தார். அந்த ஈற்றடியால் கவரப்பட்டு, சில நண்பர்களும் நானும் அதே ஈற்றடியில் தொடர்ந்து வெண்பாக்கள் பதிந்தோம். நான் எழுதிய வெண்பாக்கள் இவை)
போதாது போகமென்ற போதை சலிப்பேற
போதாரும் மஞ்சமும் புண்செய்ய- ஆதியனை
போத வடிவனை போய்த்தொழவே கண்ணிரண்டும்
போதாது போதாது போ
நாகம் இருந்தாடும் நாதன் சிரசிருந்தே
ஏகும் நதியின் இசைகேட்டு தாகமும்
மீதூறக் காசிநகர் மேவ ஒருபிறவி
போதாது போதாது போ
ஆன பிறப்பறுக்க அத்தா எனவழைத்தால்
ஏனென்று கேட்கின்ற ஏகம்பன் -தானாடும்
நாத சபையெல்லாம் நாம்காண இப்பிறவி
போதாது போதாது போ
கூடும் உயிர்ப்பறவை கூண்டென் றழுதபடி
ஆடும் திருத்தில்லை அண்டினேன்்-வீடெதற்கு?
பாதப் பொலிவழகைப் பார்க்க எழுபிறப்பும்
போதாது போதாது போ
காண விழியிரண்டுங் காணாது நின்கழலைப்
பேணக் கரமிரண்டும் போதாதே-பூணுநிலா
சீதக் குளிர்பரப்புஞ் செய்யவா இங்கொருநா
போதாது போதாது போ
பூவாரம் வாடுமெனப் புண்ணியர் மூவரும்
தேவாரம் பாடித் தமையளித்தார் -நாவார
நாதா உனைநாட நான்செய்த நல்வினை
போதாது போதாது போ