காண அரிதான பேரழகும் ஒருவகை அதிசயம்தான். வாஞ்சையும்
வாத்சல்யமும் பொங்கும் திருவுருவும் அதிசயம்தான். அம்பிகை
அத்தகைய அழகு. அம்பிகையின் திருவுருவைக் கண்டுதான்
“கறுப்பே அழகு”என்ற முடிவுக்கு உலகம் வந்தது.
“அதிசயமான வடிவுடையாள்”என்று ஆனந்திக்கிறார் அபிராமி பட்டர்.
“அரவிந்தம் எல்லாம் துதிசெய ஆனன சுந்தரவல்லி”.
மலர்களிலேயே மிக அழகானது தாமரை.அந்தத் தாமரை மலர்களில்
செந்தாமரைகளின் தலைவி திருமகள். வெண்தாமரைகளின் தலைவி
கலைமகள். அபிராமியை அலைமகளாம் திருமகளும் கலைமகளும்
துதிப்பதாலேயே அம்பிகையின் அழகில் மயங்கி தாமரைகள் எல்லாம்துதி செய்யும் பேரழகி அபிராமி.
எல்லா இடங்களிலும் மன்மதனுக்கே வெற்றி என்று பலரும் சொல்லிக்
கொண்டிருந்தனர். ஆனால் தன்னிடம் மன்மதனின் லீலை பலிக்காது
என்று உலக்குக்கு உணர்த்தும் விதமாக நெற்றிக் கண்ணால் எரித்தார்
சிவபெருமான். ஆனால் கைகளில் கரும்புவில்லும் மலர்க்கணைகளும்
கொன்டு நிற்கும் அம்பிகையோ சிவபெருமானின் மனதை வென்று தன்
வெற்றியைப் பறைசாற்றும் விதமாக அவரது திருமேனியில்
வாமபாகமாம் இடதுபாகத்தைக் கைப்பற்றினாள்.
“அதிசயமான வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசெய ஆனன சுந்தரவல்லி துணை யிரதி
பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதிசெயமாகவன்றோ வாமபாகத்தை வவ்வியதே”