பலருடைய வீடுகளிலும் திருமணக் கோலத்தில் தம்பதிகளின்
புகைப்படங்கள் சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கும். அந்த
மங்கலமான தோற்றம் பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சியை
உண்டாக்கும்.அபிராமி பட்டரோ தன்னுடைய இதயமாகிய
சுவரில் அம்பிகையும் சிவபெருமானும் திருமணத் திருக்கோலத்தில்
காட்சிதரும் தோற்றத்தை நிரந்தரமாகப் பதித்து வைத்திருக்கிறார்
தன் அடியவர்களின் உயிரைக் குறிவைத்து காலன் வந்தால் ஆட்கொண்ட
திருப்பாதஹ்த்டை முன்வைத்து அம்பிகை அப்பனுடன் முன்தோன்றி எமபயம் விலக்கி
முக்தியைக் கொடுத்தருள்வாளாம்.
உரிய காலத்தில்ஆட்கொள்ள வசதியாக முக்திக்கான தகுதியையும் முன்கூட்டியே
அம்பிகை தந்தும் வைத்திருக்கிறாளாம். முக்திக்கான தகுதி எது?
கோணல்கள் இல்லாத மனது. நேரமெல்லாம் அம்பிகையையே
நினைக்கிற நேரிய மனது. வழிபாட்டின் முக்கியப்பயனே மனக்கோணல்கள்
நீங்குவதுதானே.
“பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகலாய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
மருகலானடி வாழ்த்தி வணங்கவே”
என்கிறார் திருநாவுக்கரசர்.
மனதில் உமாமகேஸ்வர மணக்கோலம் நிலைபெற்று நின்றால்,
அம்பிகையின் பொற்பாதங்களால் ஆட்கொள்ளப்பட்டால் மனக்கோணலும்
இல்லை,மரணபயமும் இல்லை என்கிறார் அபிராமி பட்டர்.
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே