திருமந்திரம் என்ற மாத்திரத்தில் பெரும்பாலானவர்களுக்கும் தெரிந்தபாடல்களில் ஒன்று
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல்பூதம்
எங்கும் அபிராமியின் அருட்கோலத்தைக் காணுகிற பேரனுபவம்
வாய்த்ததில் அபிராமி பட்டருக்கு அளவிட முடியாத ஆனந்தம்.
ஞானத்தில் வருகிற போதையின் அழகே அதிலிருக்கும் மிதமிஞ்சிய
தெளிவுதான்.வேறுவகை மயக்கங்களில் வருகிற போதையில்
தெளிவின் சுவடே இருக்காது. சீதை குறித்துக் கேள்விப்பட்டதில் கூட
போதையேறி சீதையின் உருவெளித் தோற்றம் இராவணனுக்குத்
தெரிந்தது.ஆனால் அபிராமிபட்டருக்கு நிகழ்ந்த ஞானோதயத்தில்
பஞ்சபூதங்களிலும் உறைந்திருக்கும் பரம்பொருளாகிய பராசக்தியின்
தெளிந்த காட்சியும்,அதனை உணரும் ஞானமும் சேர்ந்தே கிடைக்கிறது.
கண்கள் அந்தக் காட்சியைக் காண்கின்றன என்ற முழு விழிப்புணர்வு
மனதுக்கு இருக்கிறது.இந்த அனுபவமே மகத்தானதுதான்.
வெளியெங்கும் பரவி நிற்கும் சுந்தரியாம் அபிராமியின் அந்தர்யாமிக்கோலத்தினைக் காண்கிற பரவசமும்,அந்தப் பரவசத்திற்கு நிகரானஅளவுக்குத் தெளிவும் சேர்ந்தே அமைகிற அதீத அனுபவத்திற்குஆளாகிறார் அபிராமி பட்டர்.
அந்தத் தெளிவும் அம்பிகை திருவுளம் வைத்ததாலேயே நிகழ்கிறது
என்ற கூடுதல் தெளிவும் அவருக்கு ஏர்படுகிறது. ஶ்ரீசக்ரத்தின்
நவகோண நாயகியாய் நிற்கும் அம்பிகையை உள்நிலையில்
உணரக் கிடைத்தவுடன் உடம்பிலுள்ள நவதுவாரங்களும் அவள்ஆட்சி செய்வதால் ஶ்ரீசக்ரத்தின் அதிர்வுகளுடன் தேகமே திகழ்வதையும்
அவர் உணர்ந்திருக்க வேண்டும்.இந்த அனுபவமும் ஆனந்தமும் பொங்கித் ததும்புகிற பாடல் இது.
வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே