தெளிவில் விளைகிற குழப்பம்போல் சுகமில்லை. சிலருக்கு சில
விஷயங்களில் ஏற்படும் தெளிவு மிகத்துல்லியமான குழப்பங்களை
ஏற்படுத்திவிடும். சோலைராஜ் என்ற என் நண்பரொருவர் அபுதாபியில்
விளம்பரத்துறையில் இருக்கிறார்.அவருடைய பாட்டனார்
வர்மக்கலைக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
அந்தக் கலையில் மகாநிபுண்ர். ஒருநாள் தன்னுடைய வயல்வரப்பில்
நடந்து போனபோது குறுக்கே ஒரு மாடு படுத்திரிந்தது. அதனை ஒரு தட்டுத் தட்டி விரட்டலாம் என்று குனிந்தார். எந்த இடத்தில் தட்டினால்
என்ன விளைவு ஏற்படும் என்று மனம் சிந்திக்கத் தொடங்கியது.

அந்த நினைப்பை மனதிலிருந்து அகற்ற நினைத்து சில நிமிடங்கள்
இடைவெளி விட்டு வேறோர் இடத்தில் தட்ட நினைத்தார். மீண்டும்
அங்கே தட்டினால் என்னாகும் என்று மனம் யோசிக்கத் தொடங்கியது.
இப்படியே பலமுறை குனிந்து குனிந்து நிமிர்ந்ததுதான் மிச்சம்.
நல்ல வேளையாக அந்தப்பக்கமாய் ஒரு வேலையாள் வர “இந்த
மாட்டை ஒட்டுப்பா”என்றார். ஒரு விநாடியில் மாடு நகர்ந்தது.இவருக்கு எங்கே எந்த நரம்பு எங்கே இயங்குகிறது என்கிற விபரம் எல்லாமே
தெரிந்திருந்தது. அந்தத் தெளிவு காரணமாகவே மாட்டை விரட்டுவதில்
குழப்பம்.அந்த வேலையாளுக்கு எதுவுமே தெரியாது. எனவே அவரால்
மாட்டை ஓட்ட முடிந்தது.

அபிராமிபட்டர் திருக்கடவூர் வீதிகளில் போய்க் கொண்டிருக்கும் போது
யாரோ ஒருவர் அவரிடம் “அய்யா! அபிராமியின் திருக்கோயில் எங்கே
இருக்கிறது”என்று வழிகேட்டுவிடுகிறார். அபிராமியைப் பார்க்கும்
இடமெங்கும் நீக்கமறக் கண்டவருக்கு இப்போது இந்த மனிதரை
எங்கே அனுப்புவது என்றொரு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது.

“அதுதானே! அபிராமியின் திருக்கோயில் எது”என்று இவரே குழம்ப
ஆரம்பித்து விடுகிறார்.எதற்கு வம்பு என்று அபிராமியையே கேட்கத்
தொடங்கி விடுகிறார். “அம்மா! எது உன் கோயில்? உன் கணவருடைய
திருமேனியில் இடது பாகமா? வேதங்களின் ஆரம்பமாஆல்லது
வேதங்களின் முடிவா?அமுதம் ததும்பும் முழுநிலவா?தாமரை மலரா?
அல்லது என் இதயமா? வெளியே தெரியாத பாற்கடலா?அம்மா….உன்
கோயில் எது ?” என்று தெளிவின் உச்சியில் தடுமாறி நிற்கிறார்
அபிராமி பட்டர். பட்டர் பாடு கொண்டாட்டம்.வழிகேட்டவர் பாடுதான்
திண்டாட்டம்.

அசைவிலாமங்கலத்தின் முழுமையாய் அம்பிகையை இந்தப் பாடலில் அழைக்கும் விதமாக “பூரணாசல மங்கலையே”என்கிறார்.சென்றடையாத
திரு என்று பரம்பொருளைச் சொல்வதற்கு நிகரான சொல்லாட்சியாக
இதனைக் கொள்ளலாம்.

அம்பிகையை அமுதம் ததும்பும் நிலவு என்பதற்கு தாத்பர்யமான
அர்த்தங்கள் உண்டு. இங்கே இன்னும் சிறிது நேரத்தில் அம்பிகை
அமாவாசையைப் பவுர்ணமி ஆக்கப் போகிறாள் என்னும் விதமாக
அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ என்கிறார். அந்த அமாவாசை
நிலவில்தானே அபிராமி அந்தாதி என்னும் அமுதம் ததும்புகிறது!!

“அரியலால் தேவியில்லை அய்யன் ஐயாறனார்க்கே”
என்பார் திருநாவுக்கரசர். எனவே மறைந்திருக்கும் பாற்கடலில்
பள்ளி கொண்டிருப்பதும் நீதானோ என்று கேட்கிறார்.

உறைகின்ற நின்திருக்கோயில் நின்கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ?முடியோ?அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ?கஞ்ச்மோ?என் நெஞ்சகமோ?
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *