உலக வாழ்வில் சில உயரங்களைத் தொடும் சாதனையாளர்களைக்
கேட்டால்,சதாசர்வ காலமும் தங்கள் இலக்கினையே இதயத்தில்
குறித்து அதிலேயே கவனம் குவித்து முனைப்புடன் முயற்சித்ததாகச்
சொல்கிறார்கள்.
உள்நிலை அனுபவத்தின் உச்சம் தொடும் ஆன்மீக சாதனையாளர்களோ
அதனினும் பலமடங்கு தீவிரமாய் அந்த கவனக்குவிப்பில் ஈடுபடுவார்கள்.அவர்களை உபாசகர்கள் என்றழைப்பதும் அதனால்தான்.
ஒரே சிந்தனையில் மனதைக் குவிப்பதும் ஒத்த சிந்தனை உள்ளவர்களுடன் உறவை வளர்ப்பதும் ஆத்ம சாதனையின் அதிமுக்கிய
அம்சங்கள்.
“கொள்ளேன் மனத்தில் நின் கோலமல்லாது; அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன்;” என்கிறார்.
எல்லாச் சமயங்களும் ஒன்று என்பது உண்மையென்றாலும் அதனை
உணர்ந்தவர்கள் சொன்னால்தான் அதற்கு மரியாதை. இன்று பலருக்கும்
அந்தச் செய்தி கேள்விப்பட்ட ஒன்றேயன்றி அவரவர் அனுபவத்தில் உணர்ந்ததல்ல. ஒரு பெரிய நகருக்குச் செல்ல எத்தனையோ பாதைகள்.
அந்தப் பாதைவழியே பயணம் செய்த அனுபவம் உள்ளவர்கள்தான்
எந்த வழியில் சென்றாலும் ஊர்சென்று சேர்வார்கள். ஆனால் புதிதாகப்
பயணம் செய்பவர்கள் ஒரே பாதையில் பயணம் செய்தால்தான்
குழம்பாமல் ஊர்சென்று சேர முடி
யும்.இராமகிருஷ்ண பரமஹம்சர்
எத்தனையோ மதங்களின் நெறியைப் பரிசோதனையாக முயன்று
அனைத்து நெறிகளிலும் ஆன்ம அனுபவம் கொண்டார்.ஏனென்றால்
அவர் ஆன்மீகப் பயணத்தில் ஏற்கெனவே சென்றடைந்தவர்.
புதிதாக முயல்பவர்களுக்கு ஒரே மார்க்கத்தில் கவனம் சிதறாமல்
முயன்றால்தான் சென்று சேர முடியும்.எனவே மூன்றாவது
கட்டளையாக “பரசமயம் விரும்பேன்” என்கிறார்.
இவை அபிராமிபட்டர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவையல்ல.நாம் சொல்ல வேண்டியவற்றை சொல்லித் தருகிறார். ஒர் அமைச்சருக்குபதவிப்பிரமாணம் செய்து வைக்கும் குடியரசுத்தலைவர் அந்தஉறுதிமொழிகளைத் தான் முன்மொழிவது போலத்தான் இதுவும்
தொடக்கத்தி ல் இந்த மூன்று கட்டளைகளைப் பின்பற்றியதால் தனக்கு
நேர்ந்த அருளனுபவத்தை அபிராமி என்னும் அற்புதத்தைத் தன்
உள்நிலையில் உணர்ந்த விதத்தை அடுத்துவரும் வரிகளில்
அபிராமி பட்டர் உணர்த்துகிறார்.
“வியன் மூவுலகுக்கு உள்ளே! அனைத்தினுக்கும் புறம்பே!உள்ளத்தே விளைந்த கள்ளே! களிக்கும் களியே! அளியஎன் கண்மணியே!”
மூவுலகில் நிறைந்திருப்பவளும் அவளே! அனைத்தையும் கடந்து
நிற்பவளும் அவளே! ஆன்மீக போதையில் தன்னைக் கடந்த நிலையில்
கள்குடித்தவர்போல் அபிராமிபட்டர் தோன்றுகிறார் என்ற விமர்சனம்
அவருடைய செவிகளில் விழுந்திருக்க வேண்டும். அந்தக் கள்
வெளியிலிருந்து உள்ளே சென்ற கள் அல்ல! உள்ளிலேயே
விளைந்த உன்மத்தம். அந்தக் கள்ளும் அபிராமி.அந்தக் கள்ளில்
விளைந்த களியும் அபிராமி.மிக எளிய நிலையில் தான் இருந்தாலும்
தன் கண்ணின் மணியாக அபிராமியே விளங்குகிறாள் என்கிற
பரவசத்தையும் இந்தப் பாடலில் அபிராமி பட்டர் அறிவிக்கிறார்.
“கொள்ளேன் மனத்தில் நின் கோலமல்லாது;அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன்;’பரசமயம் விரும்பேன்வியன் மூவுலகுக்கு
உள்ளே! அனைத்தினுக்கும் புறம்பே!உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே! அளியஎன் கண்மணியே!”