உள்ளத்திலும் உயிரிலும் அம்பிகை நிறைந்து நிற்கையில் உலகில்
உயர்ந்த விஷயங்கள் உன்னதமான விஷயங்கள் எல்லாமே அவள்தான்
என்னும் எண்ணம்தான் ஏற்படுமன்றி அவற்றில் வேறுவிதமான நாட்டம்
தோன்றாது. உழவாரப்படை கொண்டு மண்ணை திருநாவுக்கரசர் செப்பனிட,பொன்னும் மணியும் இன்னபிற இரத்தினங்களும்
வெளிப்பட்டன.

“இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்தும் நீ” என்றுதான் அவருக்குத் தோன்றியது.

அதுபோல் அழகிய மணிகளைக் காணும்போது அம்பிகையின்
அம்சமே அந்த மணிகளென்று மனம் சொல்லிற்று. உலகின் ஒளிகள்
அனைத்திற்குமே அம்பிகைதான் ஆதாரம் என்பதால் மணியின்
ஒளியும் அம்பிகைதான் என்னும் உணர்வும் பட்டருக்கு ஏற்படுகிறது.

தேர்ந்த மணிகளையெல்லாம் திரட்டிச் செய்யப்படும் அணிகலன்
கண்களில் பட்டால் அதன் பேரழகே அம்பிகையின் திருக்கோலமாகத்
தோன்றுகிறது. அதேநேரம் அந்த அணிகலனை அம்பிகைக்கு சூட்டினால்
அம்பிகையால்தான் அணிகலனுக்கு அழகேயன்றி அணிகலன் அவளுக்கு அழகு சேர்க்காது என்னும் தெளிவும் பட்டருக்குத் தோன்றுகிறது.
சுடர்களின் அழகு சொல்லில் அடங்காது.ஆனால் அவற்றால் சூரியனுக்கு ஒளியைக் கூட்ட முடியாது.அதுபோல் அம்பிகைக்கு அணிவிக்கப்படும்
அணிகலன்கள் அவளுடைய அழகைப் பெறுமேயன்றி அவளுக்கு அழகைத் தராது.

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழகே”

என்கிறார் அபிராமிபட்டர்.வினைப்பயன்களால் விளைந்த பிறவி எனும்நோய்,வினைப்பயன்களால் பிறவியில் விளையும் நோய்கள் எல்லாமே வினையின் அளவுக்கேற்ப அம்பிகை அருள்பவை. அதன் தாக்கம்குறையும்படியோ தீரும்படியோ செய்வதும் அவளுடைய கருணை.
.அம்பிகையே தீர்வு என்பதறிந்து அவளை அணுகும்வரை பிணியும் அவளே.அணுகிப் பணிந்தபின் மருந்தும்அவளே!

“நோயிலே படுப்பதென்னே கண்ணபெருமானே -நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே கண்ணபெருமானே”
என்றார் மகாகவி பாரதி.

இந்த வரிகளை சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் தன்னை அணுகாதவர்களுக்குப் பிணியைக் கொடுத்து அணுகிய பின்னர்பிணியைத் தீர்த்துவிடுகிறாள் என்ற தவறான புரிதல் சிலருக்குஏற்படக்கூடும்.

ஒருவருக்கு நோய் ஏற்படுகிறதென்றால் அவருக்கு சில ஆரோக்கியமானஅம்சங்களோ பழக்கங்களோ இல்லாததும் காரணமாய் இருக்கலாம்.

உதாரணமாக ஒருவர் உடற்பயிற்சியே செய்வதில்லை. கொழுப்பு
கூடுகிறது.உடற்பயிற்சி செய்தபின் கொழுப்பு கரைகிறது. அப்படியானால்அவர் நோய்வாய்ப்பட்டதற்கு உடற்பயிற்சி காரணமல்ல. உடற்பயிற்சி
செய்யாமை காரணம்.

அம்பிகையை சார்ந்து வாழும் வாழ்வு இயற்கையாகவே நலவாழ்வை
ஏற்படுத்துகிறது. தன்னை அணுகாதவர்களுக்கு நோய் தர வேண்டுமென்று
அம்பிகை நினைப்பதில்லை.

இதனைத் திருநாவுக்கரசர் அழகாக உணர்த்துகிறார். தன் அடியவர்கள்
தன்னடியைச் சாராதவர்கள் என்ற பேதம் சிவபெருமானுக்கு இல்லை.
ஆனால் அவனுடைய அருளைப் பெற வேண்டுமென்றால் அவனை
அணுகியவர்களுக்கே அது கிடைக்கிறது.

“சலமிலன் சங்கரன்; சார்ந்தவர்க்கல்லால்
நலமிலன் “என்கிறார்.

திருக்கடவூரில் அபிராமி அம்பாள் ஆலயத்திற்குரிய அறக்கட்டளையான பிச்சைக் கட்டளை எஸ்டேட்டின் பரம்பரை அறங்காவலராக இருந்தவர் என் பாட்டனார் .அமரர். கை.கனகசபைப்பிள்ளை. 1970 களில் அவருக்கு முகத்தில்
ஒருபகுதி பக்கவாதநோயால் செயலிழந்தது. பேச இயலவில்லை.
எல்லோரும் பொறையாறுக்கோ மயிலாடுதுறைக்கோ
சிகிச்சைக்குப் போகலாம் என்று புறப்பட்டபோது “காரை கோவிலுக்குவிடு” என்று எழுதிக்காட்டினார்.

அபிராமி சந்நிதியில் அமர்ந்து கொண்டு ஓதுவாரை அழைத்து
அந்தாதி பாடச் சொன்னார். ஒவ்வொரு பாடல் முடிந்ததும்
தீபாராதனை. அபிராமி குங்குமத்தை செயலிழந்த பகுதியில்
தடவிக்கொண்டே விழிநீர் சோர அமர்ந்திருந்தவர் அந்தச் சந்நிதியிலேயே
குணமானார். அவளே பிணிக்கு மருந்து என்னும் ஆழமான அவரின்
நம்பிக்கை வீண்போகவில்லை.

அம்பிகையின் இத்தனை அருமைகளையும் அறிந்த பின்னர்,
அவளுடைய திருவடிகளைப் பணிந்த பின்னர் உலகில்
வேறொருவரைப் பணிய வேன்டிய தேவை தனக்கில்லை என்கிறார்
அபிராமி பட்டர்.

“மணியே!மணியின் ஒளியே!ஒளிரும் மணிபுனைந்த
அணியே!அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப்
பிணியே!பிணிக்கு மருந்தே!அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரைநின் பத்மபாதம் பணிந்தபின்னே!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *