அபிராமியின் பேரருள் கிடைக்க அவள் திருவடிகளில் பக்தி
செய்தாலே போதும்.ஆனால் அவளுடைய அடியவர்கள்
தரிசனமும் அவர்களின் அணுக்கமும் அவர்களுக்கு
சேவை செய்யும் பேறும் கிடைக்க நிறைய தவம் செய்திருக்க
வேண்டும்.
அபிராமியின் அடியவர்களைப் பேணுவதன் மூலம் ஒருவர் தன்னுடையபிறவித் தொடர்ச்சியை அறுத்தெறிய முடியும்.
“பின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்”
என்கிறார் அபிராமி பட்டர்.
உண்மையான ஞானிகள் மனிதர்கள் மத்தியில் தென்படுவார்கள்.
ஆனால் அவர்களின் அணுக்கத்திற்கு அகப்பட மாட்டார்கள். நாம்
நம் வாயிலில் நின்று குரல்கொடுக்கும் எளியவர்களுக்குக்கூட
உணவிட யோசிக்கிரோம். ஆனால் பிச்சையிடுவது என்பது
இத்தகைய ஞானிகளைத் தேடிச்சென்று பலவந்தமாக உணவு
படைப்பது. அவர்கள் ஓரிடத்தில் நிற்கக்கூட மாட்டார்கள்.
அவர்கள் செல்கிற வேகத்தினும் கூடுதல் வேகத்தில் துரத்திச் சென்று
உணவு படைக்க வேண்டும்.இதையே “ஓடியிட்ட பிச்சை” என்கிறார்
சிவவாக்கியர்.
ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தருமமும்
சாடிவிட்ட குதிரைபோல் தருமம் வந்து நிற்குமே”
என்பது சிவவாக்கியம்.
மகாகவி பாரதி இந்த நுட்பத்தை உணர்ந்து புதுவையில் குள்ளச்சாமி
பின்னரும் இன்னபிற சித்தர்கள் பின்னரும் திரிந்திருக்கிறார்.
மும்மூர்த்திகளுக்கும் அன்னையாகிய அபிராமி உலகின் அத்தனை
துயரங்களுக்கும் அருமருந்தாய்த் திகழ்பவள்.அவளுடைய திருவடிகளில்
பக்தி செலுத்துவதாலும் அவளுடைய அடியவர்களைத் தேடிச்சென்று
பேணுவதாலும் உலகவாழ்வின் மற்ற பொறுப்புகளுடன் அல்லாட
வேண்டிய அவசியமிராது. இனி எனக்கு என்ன கவலை?உன் திருவடிகளை
எவ்வித மறதியும் இன்றி இடையறாமல் வழிபடும் பேறு கிடைத்து
விட்டது என்கிறார் அபிராமி பட்டர்.
“பின்னே திரிந்துன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன் முதல்மூவருக்கும்
அன்னே!உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி!உன்னை மறவாமல் நின்றேத்துவனே”
(தொடரும்)