மனிதனிடம் இருக்கும் சில குணக்குறைபாடுகள்,பிறவிகளின்
தொடர்ச்சியாய் வருபவை.சிலருக்கு மற்றவர்கள்மேல் இனந்தெரியாத
வெறுப்பு தோன்றும்.யாருடனும் கலந்து பழக மாட்டார்கள்.தங்களின்
சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும்
பார்ப்பார்கள். இப்படி தங்கள் மனத்தடைகளிலேயே சிக்கிப்போகிற
சூழல் முந்தைய பிறவிகளின் வினைத்தொடர்பால் வருபவை.
அந்தத் தடைகளை அகற்றுகிற வரையில் யார்மீதும் அன்பு காட்ட
முடியாது. பிறவியிலேயே வரும் இந்தக் குணவிசித்திரங்கள்
இந்தப் பிறவியிலும் நன்கு வேர்விட்டு அடுத்தடுத்த பிறவிகளுக்கும்
வழிவகுக்கும்.
அதனாலேயே இதை வஞ்சப்பிறவி என்கிறார் அபிராமிபட்டர்.
முந்தைய பிறவிகளின் சாரமெடுத்து அடுத்தடுத்த பிறவிகளின்
தொடர்ச்சிக்கும் வழிவகுக்கும் இந்த வினைச்சுமையை அகற்றுவதன்
மூலம் அம்பிகை பிறவிச்சங்கிலியை உடைக்கிறால். வினைப்பயனால்
வந்த மனத்தடைகள் நீங்கியதும் எல்லோரிடமும் அன்புபாராட்டும்
நேயமும் உயிரிரக்கமும் மடைதிறந்த வெள்ளமாய்ப் பொழிகிறது.
இறுகிக் கிடந்த இதயம் உருகி அன்பு பொழிவதே நாம் அம்பிகையின்
அன்பு வளையத்துக்குள் வந்துவிட்டதன அடையாளம்.
அத்துடன் விட்டாளா அபிராமி?அம்பிகையின் திருவடித்தாமரைகளை
சென்னியில் சூடிக்கொள்ளும் பெரும்பேற்றினையும் தருகிறாள்.
உடைத்தனை வஞ்சப் பிறவியை ! உள்ளம் உருகுமன்பு
படைத்தனை!பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை! ”
“எனக்கே அடைத்தனை” என்று சொல்வதுதனக்கு மட்டும் அந்த உரிமைஎன்ற பொருளிலா?அல்ல.முந்தைய பாடலில் தன்னிடம் சில குறைகள்இருப்பதாகப் பாடினார்.குறைபாடுகள் மிக்க எனக்கே அந்தப்பேற்றினைத் தந்தாயானால் நீ எவ்வளவு கருணை மிக்கவள் என்று வியகிறார்.
மனதில் இருக்கும் அழுக்கை ஏவலாள்களைக் கொண்டா அம்பிகை
துடைக்கச் செய்தாள்? தன்னிடம் பெருக்கெடுக்கும் கருணையின்
தீர்த்தத்தால் தானே நம் மனதின் அழுக்குகளை அகற்றுகிறாள்.
அந்த அருள்நலத்திற்கென ஈடிணை ஏதும் சொல்ல முடியுமா என்ன!!
உடைத்தனை வஞ்சப் பிறவியை ! உள்ளம் உருகுமன்பு
படைத்தனை!பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை! நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை! சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே!