தமிழிலக்கணத்தின் விசேஷமான அம்சங்களில் ஒன்று நிரல்நிறையணி.
ராமுவும் சோமுவும் சைக்கிளிலும் ஸ்கூட்டரிலும் வந்தார்கள் என்றால்
ராமு சைக்கிளிலும் சோமு ஸ்கூட்டரிலும் வந்ததாகப் பொருள்.
நடனமாடக்கூடிய சிவபெருமானுடன் சொல்லோடு பொருள்போல
பின்னிப் பிணைந்திருக்கும் அபிராமியே என்பதன்மூலம்,
சொல்-சிவபெருமான்,சொல்லின் பொருள்-அபிராமி என்று
நயம்பட விளக்குகிறார் அபிராமிபட்டர்.
“சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தினுள்ள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோரும் ஏத்தப் பணிந்து””
என்பது மணிவாசகர் வாக்கு.
“சொல்லும் பொருளுமென நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே!
என்னும்போது சிவம் என்ற சொல்லுக்கு சக்தியே பொருள் என்று
புலப்படுகிறது. சிவம் என்றால் மங்கலம். அம்பிகையோ மங்கலை.
சிவா என்றால் “எது இல்லையோ அது”. அம்பிகையோ “எண்ணில்
ஒன்றுமில்லா வெளி”.
பூங்கொடி போன்ற அம்பிகையின் திருவடிகள் அந்தக் கொடியில்
அப்போது பூத்த புத்தம் புதிய மலர்போல் திகழ்கிறது. அந்தத் திருவடிகளைஇரவும் பகலும் தொழுபவர்கள் அழியாத செல்வாக்கைப் பெறுவார்கள்.தவநெறியில் அவர்களுக்கு நாட்டம் பெருகி தவமும் கைகூடும்.வாழ்வின் நிறைவில் சிவலோகத்தையும் சென்று சேர்வார்கள் .
சொல்லும் பொருளுமென நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே!நின்புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே!