சித்தி என்ற சொல்லுக்கு பல்வேறு நிலைகளில் விதம்விதமான
பொருள் சொல்வது வழக்கம். எனினும் அடிப்படையில் பார்த்தால்
ஒருவருக்கு எது இயல்பாக எளிதாகக் கைவருகிறதோ அதற்கு
சித்தி என்று பெயர்.கைவரப்பெற்ற திறமைக்கு சித்தி என்று பெயர்.
ஒரு மருத்துவர், நாளொன்றுக்கு பத்து அறுவை சிகிச்சைகள் செய்கிறார்என்றால் பத்தும் வெற்றியடைகின்றன என்றால் அந்த நிபுணத்துவம் அவருக்கு சித்தியாகி இருப்பதாகப் பொருள்.
உலகவாழ்வில் பெறும் இத்தகைய திறன் சார்ந்த சித்திகளுக்கும்
ஆன்மீகத்தில் கைவரப் பெறும் சித்திகளுக்கும் அவற்றின்
அடிப்படைத் தன்மையில் வேறுபாடில்லை. ஆனால் இது
திறமையைத் தாண்டிய அம்சம் என்ற தெளிவும் இது நம்
முயற்சியையும் பயிற்சியையும் கடந்து மலர்ந்த அம்சம் என்ற
உணர்வும் ஏற்படுமேயானால் அது உள்நிலை வளர்ச்சிக்கும்
பயன்படுகிறது.ஆன்மீக சித்திகள் இத்தகைய விழிப்புணர்வுடன்
விளையும்போது அவையே அவரை முழுமையான சித்தராக
மலரச் செய்கின்றன.
நமக்குக் கைகூடும் சித்தியாக அம்பிகை இருக்கிறாள்.அந்த சித்திகளைத்தரும் அதிதேவதையாகிய பராசக்தியும் அவளே.””சக்திதான் சிவத்தை ஈனும்””எனும் கோட்பாட்டின்படி சக்தியிலிருந்து தழைக்கும் சிவமும் அவளே.
முக்தி பெற வேண்டுமென்ற முழு விருப்பத்துடன் யாரெல்லாம் தவமியற்றுகிறார்களோ அவர்கள் பெறுகிற முக்தியும் அபிராமிதான்.
அந்த முக்திக்கு வித்தாக எதுதிகழ்கிறது?? குரு தருகிற தீட்சையும்
குருமுகமாக நமக்கு உபதேசிக்கப்படுகிற பீஜ மந்திரங்களும் தவத்தின் வித்துக்கள்.இன்று யோகா தியானம் போன்ற வகுப்புகளில் ஈடுபடுவோரில் பலரும்முக்தியை நோக்கமாகக் கொண்டு சேர்வதில்லை.
உடல்நலம்,மனநலம் தெளிவு போன்றவற்றுக்காகவே அவற்றைப் பயில்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த நோக்கத்துடன் வந்தாலும் தியானத்தின் விதை விழுந்து வளர்கிற போது அவர்களின் புற விருப்பங்களைக் கடந்து முக்தி நோக்கிய தேடலை உருவாக்கி விடுகிறது.
அந்த வித்து முளைத்தெழும்போது அசையா ஞானமாய் திடத்துடன் மலர்கிறது.அந்த அசையா ஞானமே புத்தி.
“அசைவறு மதிகேட்டேன் -இவை
அருள்ள்வதில் உனக்கெதும் தடையுளதோ”” என்றார் மகாகவி பாரதி.
இந்த அசைவிலா ஞானத்தை அசைத்துப் பார்க்கும் சம்பவங்கள்
சிலருக்கு நிகழும்.அந்த சம்பவங்களின் பாதிப்பு புத்தியை அசைத்து
விடாதபடிக்கு புத்தியின் உள்நின்று புரக்கிற பேராற்றலாகவும்
அம்பிகையே திகழ்கிறாள்.
“சித்தியும் சித்திதரும் தெய்வமாகித் திகழும் பரா
சத்தியும் சக்தி தழைக்கும் சிவமும்,தவம் முயல்வார்
முத்தியும் முக்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே