வாழ்வில் நமக்கிருக்கும் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் இடையிலான வேறுபாடு நம் அணுகுமுறையிலிருந்தே புரியும்.தொடர்பிலிருக்கும் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் நம்மை சந்திப்பதாகக் கூறியிருந்தால் நாம் அந்த நேரத்தை அவருகென ஒதுக்கி வைப்போம்.

ஆனால் அவர் வராவிட்டால் அதற்காகப் பெரிதாய் அலட்டிக் கொள்ளமாட்டோம். ஆனால் நெருக்கமான உறவில் இருக்கும் ஒருவர் வருவதாகச் சொன்னாலோ அவர் சொன்ன நேரத்திற்கு முன்பிருந்தே மனதில் எதிர்பார்ப்பு பெருகத் தொடங்கும்.காலந் தாழ்த்தினால் பதட்டம் பரவும்.

உறவின் அணுக்கமே உணர்வின் பெருக்கத்தைத் தீர்மானிக்கிறது.
அம்பிகையை சரணடைந்த அபிராமி பட்டருக்கு மீதூறும் உரிமை
காரணமாய் செல்லச் சண்டைகள் வருகின்றன.

என்னை நீ ஆட்கொண்டுவிட்டாய். இப்போது உதாசீனப்படுத்துவதுபோல்தெரிகிறது.நான் என்ன செய்தாலும் அதை நீ உன் தூண்டுதலாலேயேசெய்கிறேன்.நான் நடுக்கடலில் விழுந்தாலும் கரையேற்றுவது உன்திருவுள விருப்பம் என்று சண்டைக்கு வருவது போல் பேசுகிறார்.

ஆனால் அம்பிகை ஒருபோதும் தன்னைக் கைவிட மாட்டாள் என்ற
நம்பிக்கை பிறக்கிறது. எனவே “ஒன்றே பலவுருவே அருவே என்
உமையவளே” என்று உருகி நிற்கிறார்.

வழிபாட்டு நெறிகளில் ஓருருவில் தொடங்கி வெவ்வேறு வடிவங்களில்இறைமையை உணர்வார்கள்.”ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க” என்பார்மாணிக்கவாசகர்.அதையும் கடந்து அருவுருவ நிலை. அருவுருவநிலையைக் கடந்து
அருவநிலை.இந்த நிலைகள் எல்லாமாகவும் இருப்பவள் உமையவளேஎன்கிறார் அபிராமிபட்டர்.

“அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்லவென்கை
நன்றே உனக்கு ? இனிநான் செய்யினும் நடுக்கடலுள்
சென்றே விழுகினும் கரையேற்ற்றுகை நின் திருவுளமே
ஒன்றே!பலவுருவே!அருவே! என் உமையவளே!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *