இறைவன் மீது நாம் பக்தி செலுத்த வேண்டுமென்பது கூட இறைவன்
மேற்கொள்கிற முடிவேயன்றி நம் முடிவல்ல. பக்குவப்பட்ட உயிரை
வலிய வந்து ஆட்கொள்ளும் பெருங்கருணை கடவுளின் இயல்பு.
உமையும் சிவனும் அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தில் காட்சியருளி
அபிராமி பட்டரை ஆட்கொண்டு அவரையும் பக்தி செலுத்த வைத்து
விட்டார்கள். அதனால் என்னென்ன விடுதலைகள் ஏற்படுகின்றன
என்ற பட்டியலைத் தருகிறார் அபிராமிபட்டர்.
எந்த நெறி நமக்கு முக்தி தருமோ என்று தேடியலைய வேண்டியதில்லை.உமையும் உமையொரு பாகனும் இந்தப் பிறவியிலேயே வினைகளைநீக்கப்போவதால் வேறொரு தாயின் கருவில் மீண்டும்வந்து தோன்ற வேண்டிய தேவையில்லை.பேரின்பமாகிய கருணையில்
திளைத்துவிட்டதால் சிற்றின்பத் தேடலும் இனியில்லை.
உய்விக்கும் நெறியைத் தேடியலையாமல் மனம் அமைதியடைகிறதுஇன்னொரு கரு புகும் தேவையில்லாமல் உயிர் அமைதியடைகிறது.சிற்றின்ப வேட்கைஅவிந்துவிட்டதால் உடல் அமைதியடைகிறது.
“உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை: ஈன்றெடுப்பாள் ஒரு தாயுமி;ல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே”.