தன்னுடைய திருவடிகளை தலையின்மேல் அம்பிகை சூட்டியதால்
என்ன நிகழ்ந்தது என்று சொல்லும் இந்தப் பாடலிலும் இதற்கடுத்த
பாடலிலும் மரணமிலாப் பெருவாழ்வின் மாட்சியையும் அதற்கான
மார்க்கத்தையும் உணர்த்துகிறார் அபிராமி பட்டர்.
கடலில் அகப்பட்டுக் கொண்டு தத்தளிக்கிற மனிதனுக்கு கரை சேர
வேண்டுமெனும் ஆசை வருகிறது. அருகிலொரு கப்பல் வந்து கயிறு
வீசினால் கரைசேர முடிகிறது.ஆனால் ஒரு பெருங்கடல் இருக்கிறது.
அது பிறவிப் பெருங்கடல்.அலையலையாய் ஆசைகள் ஆள்கிற
கடல். இந்த ஆசைக்கடலில் வரும் கயிறு பாசக்கயிறு. அது நம்மைக்
கரை சேர்ப்பதில்லை. மீண்டும் மீண்டும் பிறவிக்கடலில் தள்ளி
வேடிக்கை பார்க்கிறது.
ஒருசிறிதும் இரக்கமற்ற காலனின் இந்தப் பாசக்கயிற்றில் சிக்கி
மீண்டும் மீண்டும் பிறவிக்கடலில் விழ இருந்தேன்.அம்பிகையே!
நீயாக வலிய வந்து உன் திருவடிகளை என் சிரசில் சூட்டி ஆண்டு
கொண்டாய். இந்த நேசத்தை என் சொல்வது என்கிறார் அபிராமி பட்டர்.
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லல் பட இருந்தேனை நின் பாதமென்னும்
வாசக்கமலம் தலைமேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என்சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே