அம்பிகையின் திருவடிகள் தலைமேல் சூட்டப்பட்டதால் வினைகள்
முற்றிலும் நீங்குகின்றன.எனவே காலன் அருகே வருவதில்லை.
இதுதான் இந்தப் பாடல் நமக்குச் சொல்கிற விஷயம். அது எப்படி என்கிறகேள்வி எழலாம்.அதற்கான முழு விளக்கத்தை அடுத்த பாடலில் அருள்கிறார்அபிராமி பட்டர்.

பொதுவாகவே தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க வேண்டுமென்றால்அவர்கள் வருவதற்கான பாதையை அடைப்பார்கள்.எந்த வழியாக எமன்
வருகிறான் என்று பார்த்து அந்தப் பாதையை அடைக்கும் உபாயத்தைஉணர்ந்து கொள்கிறார் அபிராமி பட்டர்.

“இழைக்கும் வினை வழியே அடும் காலன்”

உண்மையில் எமன் செய்வது அஞ்சல் வேலையைத்தான். இங்கிருக்கும்உயிரை அங்கும் அங்கிருக்கும் உயிரை இங்கும் அனுப்பி வைப்பது மட்டுமே எமனின் வேலை.எந்த உயிரை எங்கே அனுப்புவது என்கிற முடிவையும் எமன் எடுப்பதில்லை. தாங்கள் இழைக்கும் வினைவழியாக தாங்கள் அடுத்து செல்ல வேண்டிய இடத்தையும் அந்த உயிர்களே தீர்மானிக்கின்றன. எனவே வினைகளின் பாதையை அடைத்து விட்டால்
எமன் நெருங்க வழியில்லை.

இரண்டுவகை வினைத் தொகுதிகள் பிறவித் தொடர்ச்சியை உருவாக்குகின்றன.ஒன்று பிராரப்த கர்மம். இன்னொன்று சஞ்சித கர்மம். ஓர் உயிருடனேயேஒட்டிக் கொண்டிருப்பது பிராரப்த கர்மம். அந்த உயிர் அடுத்த பிறவியைஎடுக்கிற போது வந்து சேர்வது சஞ்சித கர்மம்.

விமானத்தில் பயணம் செய்பவர்கள் ஒரு சிறிய பெட்டியைத்தான் கைகளில்கொண்டு செல்ல முடியும். பெரிய பெட்டிகள் இருந்தால் அதனை விமானத்தில்தனியாகப் பதிவு செய்வார்கள். அதற்கு செக் இன் பேகேஜ் என்று பெயர்.கையிலேயே கொண்டு போவதற்கு ஹேண்ட் பேகேஜ் என்பார்கள்.இந்தஹேண்ட் பேகேஜ் போன்றதுதான் பிராரப்த கர்மம்.

போய் சேர வேண்டிய ஊரில் உள்ள விமான நிலையத்தில் நீங்கள்
சென்று சேர்ந்த பிறகு கன்வேயர் பெல்ட்டில் உங்கள் பெரிய பெட்டி
வந்து சேரும். அதுதான் சஞ்சித கர்மம்.

விமான நிலையத்திலேயே நீங்கள் கடைகளில் வாங்கும் பொருட்கள் போன்றவை இப்பிறவியில் நீங்கள் சேர்க்கும் ஆகாமிய கர்மம்

உங்கள் உபாசனா மூர்த்தியோஅல்லது உங்கள் குருநாதரோ உங்களுக்கு முக்தி கொடுப்பது என்று
முடிவு செய்துவிட்டால் உயிர் பிரிகிற வேளையில் பிராரப்த
கர்மத்தையும் ஆகாமிய கர்மத்தையும் பிடுங்கிக் கொள்வார்கள். உயிர் உடலை விட்டு நீங்கிய பிறகு உங்களைத் தேடிவரும் சஞ்சித கர்மத்தையும் எரித்து விடுவார்கள்.

இந்த விமானப் பயணத்தில் உங்கள் கைப்பெட்டியும் களவுபோய் உங்கள் செக் இன் பேகேஜும் வந்து சேராத நிலைமைதான் முக்தி. இதைத்தான்இன்னோர் இடத்தில் ,”மறித்தேன் மறலி வருகிற நேர்வழி” என்கிறார்அபிராமிபட்டர்.

எமன் தன்னை அழைக்க வருவானோ என்று உயிர் நடுங்கும் போது
அவன் வரும் பாதையை அடைத்து அம்பிகை அபயக்குரல் காட்டி
ஆட்கொள்ள வேண்டுமென்று கேட்கிறார்.தந்தையாகிய சிவபெருமானின்சித்தம் இளகும்படியாக சந்தனம் பூசிய திருமுலைகள் கொண்டகருநிறத் தாமரை போன்றவளே! உயிரச்சம் ஏற்படும் போது உன்னையேஅன்னை என்றழைத்து அடைக்கலம் தேடி ஓடிவருவேன் என்கிறார்.

அபிராமி பட்டர். அச்சம் ஏற்படுகையில் அன்னையைத் தேடுவது
குழந்தையின் இயல்பு. அச்சம் நீங்கும் விதமாய் அணைத்துக் கொள்வதுஅன்னையின் இயல்பு.

“இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்,அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *