உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கும் ஒரு பெரிய மனிதரை
சந்திக்க குடும்பத்துடன் போகிறீர்கள்.உங்களை வரவேற்று உபசரித்த
அவர் தன்னுடைய மாளிகையில் மிக அதிகமான வசதிகள் கொண்ட
தன்னுடைய அறையிலேயே உங்களைக் குடும்பத்துடன் தங்கச்
சொல்கிறார். அவருக்கு நீங்கள் எவ்வளவு முக்கியம் என்று வீட்டில்
இருப்பவர்களுக்குக் காட்டுவதுதான் அவருடைய நோக்கம்.
இப்படிச் செய்துவிட்டாரே இவர் எங்கே தங்குவார் என்று கவலையுடன்அவருடைய வேலையாளைக் கேட்கிறீர்கள்.”இது என்ன பிரமாதம்?அடுத்த தெருவிலேயே அய்யாவுக்கு ஒரு பங்களா இருக்கிறது.அவருடைய ஆலையில் அருமையான விருந்தினர் மாளிகை இருக்கிறது. இவ்வளவு ஏன்? ஐயாவுக்கென்று சொந்தமாக
ஐந்து நட்சத்திர விடுதியும் இருக்கிறது”என்று வேலையாள்
சொல்ல நீங்கள் அசந்து போய் நிற்கிறீர்கள். சொன்னது போலவே
இந்த இடங்களையெல்லாம் ஒரு சுற்று சுற்றிவிட்டு தனக்கு
விருப்பமான இடத்தில் அந்தப் பெரிய மனிதர் தங்கிக் கொள்கிறார்.
அவர் நினைத்தால் இங்கே எங்கே வேன்டுமானாலும் உங்களைத்
தங்க வைத்திருக்கலாம்.ஆனால் உங்கள்பால் கொண்ட அன்பால்
உங்களுக்கு மிக விருப்பமான வசதிகள் கொண்ட தன்னுடைய
அறையில் தங்க வைக்கிறார். அவர் தங்க இடமா இல்லை!!
உங்களுக்கு அவர் கொடுக்க விரும்பிய இடமல்லவா பெரியது!
ஒரு ந்ண்பருக்கே இவ்வளவு வாஞ்சை இருக்குமென்றால்
அம்பிகையின் திருவுள்ளத்தில் பெருக்கெடுக்கும் ஆதுரத்துக்குக்
கேட்கவா வேண்டும்?
அவளுடைய திருவடிகளையே சரண்புகும் அடியவர்களுக்கு
வானுலக வாழ்வைத் தருவாளாம்.தான் உடனிருந்தால் தன்னையே
வழிபட்டுக் கொண்டு வானுலக இன்பங்களை அனுபவிக்க
மாட்டார்களோ என்று பிரம்மனின் சதுர்முகங்களில் கலைமகளாகவும்திருமாலின் திருமார்பில் திருமகளாகவும் இறைவனின் திருமேனியில்இடப்பாகத்திலும் தாமரையிலும் ஒளிபொருந்திய கதிரவனிடத்தும்நிலவினிடத்தும் சென்று குடிகொள்வாளாம்.
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே