வானவர்களுக்கு வாய்க்காத பெருமையெல்லாம் மண்ணில் உள்ள
மனிதர்களுக்கு அபிராமியால் அருளப்பட்டிருப்பதை சொல்லிக்
கொள்வதில் அபிராமி பட்டருக்கு அலாதியான ஆனந்தம்.
பிறைநிலா நிலவின் பிளவு. அந்தப் பிறைநிலாவின் வாசன் வீசும்
திருவடிகள் அபிராமியின் திருவடிகள் என்கிறார். அப்படியானால்
பிறைநிலவு அம்பிகையின் திருவடிகளில் பதிந்திருக்க வேண்டும்.
அவ்வாறெனில்,தன் தலையில் நிலவை சூடியிருக்கும் ஒருவர்
அம்பிகையின் திருவடிகளில் விழுந்து வணங்கும் போது அந்த
நிலவின் வாசனை அன்னையின் திருவடிகளில் பதிந்திருக்கும்.
ஒருமுறை விழுந்து வணங்கினால் வாசனை படியுமா என்ன?
அடிக்கடி விழுந்து வணங்கியதில் நில்வின் வாசனை நன்கு
படிந்திருக்க வேண்டும். அதுசரி…இப்போது அதுவா முக்கியம்?
நிலவின் மணம் வீசும் திருவடிகளை எங்கள் தலையின்மேல்
அம்பிகை பதித்தாளே!இந்தப் பெரும்பேறு எண்ணிக்கையில்
அடங்காத விண்ணவர்களுக்கு சாத்தியமா என்ன?இதை
எதற்கும் அம்பிகையையே கேட்போமே என்று முடிவெடுக்கிறார்
.சிவந்தகண்களையுடைய ஆதிசேஷன்மேல் பள்ளி கொண்டிருக்கும் நிலையானபேரருளாகிய அம்பிகையே! நீயே இதர்கு பதிலைச் சொல் ” என்கிறார்.
திருமாலும் சக்தியும் ஒரே அம்சம் என்பதாலேயே அவர்களை
புராணங்கள் அண்ணன் தங்கையென்று வர்ணிக்கின்றன.
உலகில் தன்னுடன் முரண்பட்ட இரணியனை தன்னுடைய
நகத்தால் கிழித்தெறிந்த பராசக்தியே என்று பாடுகிறார்
அருணகிரிநாதர்.
“தரணியில் அரணிய முரண் இரணியன் உடல் தனை நக நுதிகொடு
சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி” என்பது திருப்புகழ்
“திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா ! எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கு இந்தத் தவம் எய்துமோ! தரங்கக் கடலுள்
வெங்கட் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே!”