உலக வாழ்வின் இன்பங்களுக்குப் பொருளே அடிப்படை. அதுவே ஆதாரம்.ஆனால் அதுதான் எல்லாமுமா என்றால் இல்லையென்றே
சொல்ல வேண்டும்.பொருளின் பெருமை பேசும் திருக்குறள் ஒன்று.
“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.”
இதன் பொருள் என்ன? பொருட்படுத்தத்தக்க தகுதிகள் ஏதுமில்லாதவர்களைக் கூட பொருட்படுத்தத் தக்கவர்களாக மாற்றும்பொருட்செல்வத்தை விடவும் பெருமை வாய்ந்தது வேறேதுமில்லை.
திருவள்ளுவர் இப்படிச் சொல்வாரா? “பொருட்செல்வம் பூரியார் கண்ணும்உள” என்று சொன்னவரல்லவா அவர்? அப்படியானால் இந்தக்குறளை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?எனக்குத் தோன்றுவது இதுதான்.
பொருட்படுத்தவே தேவையற்ற ஒரு மனிதரிடம் பணம் சேர்ந்தால்
அவர் ஏதோ முக்கியமானவர் என்று தோன்றும். அப்போது கூட
பொருளைத் தாண்டி அவரிடம் பொருட்படுத்தத் தக்க அம்சமேதுமில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்பதால்தான் திருவள்ளுவர்
“பொருளல்ல தில்லை பொருள்” என்றார்.
உண்மையில் பொருள் ஒன்று மட்டுமே பெருமை பொருந்திய
விஷயமில்லை. அந்தப் பொருட்செல்வத்தை அனுபவிக்கும் புண்ணியம்அம்பிகையின் திருவருளால்தான் கிடைக்கும் .அந்தப் பொருளாகவும்பொருளை அனுபவிக்கக்கூடிய போகமாகவும் அம்பிகையே இருக்கிறாள்.
பொருளும் போகமும் பொருந்திய வாழ்வில் சிலநேரம் அந்த இன்பம்தான் நிலையானது என்பது போல் ஓர் எண்ணம் தோன்றுகிறது.இதுதான் மாயை. அந்த மாயையைக் கொடுப்பதும் உரிய பக்குவத்தில்அந்த மாயையைக் கெடுப்பதும் அம்பிகைதான்.”மாயை தொலைக்கும்
மஹாமாயை தானாவாள்” என்கிறார் மகாகவி பாரதி.
இதுதான் நிரந்தரம் என்கிற மருள் நீங்கி மனதில் தெருளாகிய ஞானம்பிறக்கிறது.அந்த ஞானம் பிறந்த பிறகு மும்மலங்களால் விளையக்கூடிய இருளே ஏதுமின்றி ஒளி மட்டுமே நிரம்பி உயிரே ஒளிமயமாகிறது.
உலக வாழ்வின் இன்பங்களையும் அவற்றை நுகரும் வாய்ப்பினையும்படைத்ததோடு அதையே நிலையென்று கருதும் மருளையும் தந்துஅந்த மருளை நீக்கி ஞானமும் தந்து உள்நிலையை ஒளிவெள்ளமாக்கும்
அம்பிகையின் அருள்நலத்தை வியக்கிறார் அபிராமிபட்டர்.
அம்புயாதனத்து அம்பிகையே”என்பது உடலிலுள்ள சக்கரங்களாகிய
தாமரைகளில் குடிகொண்டு ஒளிவெள்ளமான நிலையைத் தரும்
தாத்பர்யத்தை விளக்குவதாகப் பொருள் கொள்பவர்களும் உண்டு.
பொருளே பொருள்முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே